மதுரை காளவாசல் பைபாஸ் சாலை பகுதியில் மரங்களை வெட்டும் பணியின் போது, மின்சார கம்பி உரசி கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள தலப்பாக்கட்டி பிரியாணி மற்றும் ஜெய்சக்தி ஹோட்டல் அருகிலுள்ள ரேஷன் கடைப் பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் மரங்களை வெட்டும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.
அப்போது, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 45) என்பவர் மரத்தின் மீது ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் மரத்திலிருந்து கீழே தவறி விழுந்தபோது, அருகில் சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியிலும் உரவிப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பலத்த காயமடைந்து அவர் கீழே சுருண்டு விழுந்தார்.

உடன் பணியாற்றிய சக பணியாளர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காகவும் மேலதிக நடவடிக்கைகளுக்காகவும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



