பெற்றோராலும் போர் காலத்திலும் நிற்கதியாய் நிற்பதோ அப்பாவி குழந்தைகள் தான்.இந்த நாளை தான் உலக அனாதைகள் தினமாக ஜனவரி 6 இன்று கொண்டாடுகிறோம்.
உலகின் ஒவ்வொரு போரிலும் எஞ்சுவது நிராதரவாய் நிற்கும் குழந்தைகள்தான். ஆதரவற்றோர் பற்றிய பதிவுகள் கி.மு 400-ம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசர்கள் காலம் தொடங்கியே நமக்குக் கிடைக்கின்றன. ரோமானியப் பேரரசு காலத்திலேயே அனாதை இல்லங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.பைபிளுக்குப் பிறகு அதிகம் அச்சிடப்பட்டு விற்கப்படும் புத்தகம், இரண்டாம் உலகப்போரால் யாருமற்றவளாகி இறந்த சிறுமி ஆன் ஃப்ராங்கின் போர்க்கால நாட்குறிப்புகள்தான். இரண்டாம் உலகப்போர், ஆன் ஃப்ராங்க் போன்ற ஐந்து லட்சம் அனாதைச் சிறுவர்களை விட்டுச்சென்றுள்ளது என அன்றைய பதிவுகள் கூறுகின்றன. துரதிர்ஷ்டவசமாக போர் என்பது துப்பாக்கிகளால் மட்டுமே முடிந்துவிடுவதில்லை. பசி, பஞ்சம், நோய், உரிமைப்போர், சமூக முரண்பாடுகள் என போருக்குப் பல முகங்கள் இருக்கின்றன. உலகின் பெரும் ஆட்சியாளர்களும் மனிதநேயமிக்கவர்களும் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருந்தாலும் இன்றுவரை மனிதர்களை மனிதர்களே கைவிடும் சூழலுக்கு அவர்களால் எந்தவித பதிலும் தரமுடியவில்லை.
2009-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் உச்சகட்டத்தை அடைந்தபோது தாங்கள் உயிர் எஞ்சுவது கடினம் என்று அறிந்த பெற்றோர்கள், அங்குள்ள பௌத்த மடாலயங்களில் தங்கள் பிள்ளைகளை விட்டுச் சென்றனர்.ஆப்பிரிக்காவில் இது வேறு கதை. 12 சதவிகித குழந்தைகள் எய்ட்ஸ் போன்ற பெருநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள். அங்கு, அனாதை விடுதிகளும் குறைவு என்னும் சூழலில் பிள்ளைகளின் இறப்பு எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மும்மடங்கு அதிகம் என்றே சொல்லலாம்.
கொள்கையிருந்தும் மனிதநேயம் குப்பையில் என்பதற்கு உதாரணமாய் ரஷ்யாவைச் சொல்லலாம்.அங்கு சிறார்கள் எவருமின்றித் தனித்து அனாதைகளாக விடப்படுகின்றனர். ஆதரவற்ற அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர்களின் 16 வயதுவரை அரசு ஏற்கிறது. அதன்பிறகு தங்கள் வாழ்வை அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இப்படி போரினால் கைவிடப்பட்ட பல குழந்தைகள் மாண்டும் துன்பப்பட்டும் இருக்கின்றனர். உலக அனாதைகள் தினம் பிரெஞ்சு அமைப்பான SOS Enfants en detres ஆல் தொடங்கப்பட்டது. வடகிழக்கில் சுமார் 9,00,000 குழந்தைகள் இருப்பதாக யுனிசெஃப் மதிப்பிட்டுள்ளது, இவர்கள் அனைவருமே போரினால் கல்வி பற்றாக்குறை, உணவு, தங்குமிடம் அல்லது நேரடி காயம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகள்.
இதுகுறித்து ‘ஆலிவர் ட்விஸ்ட்’ பற்றிய புனைவை எழுதிய சார்லஸ் டிக்கன்ஸ் கூறியது “எல்லாம் தன்னை கைவிட்ட சூழலில் தன்னைப்போன்ற ஒரு சிறுவன் கூறிய அன்பான ஒற்றை வார்த்தையைத்தான் ஆலிவர் பற்றிக்கொண்டான்” எனக் குறிப்பிட்டார்.