சிவகங்கை மாவட்டம் ஈசனூரில் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் மகளிரணி நடத்தும் நான்காம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இந்த திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் இவ்விழா விமர்சையாக நடைபெற்றது. ஈசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் இக்கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிளக்கு பூஜையில் 108 திருவிளக்கு மந்திரங்கள் முழங்க பெண்கள் முதலில் தாங்கள் எடுத்து வந்திருந்த குத்துவிளக்குகளை அலங்கரித்து தீபம் ஏற்றினர். பின்பு மஞ்சள் பொடியால் விநாயகர் செய்து அதற்கு பூஜை செய்தனர். சிவாச்சாரியார்கள் சிறப்பு மந்திரங்கள் சொல்லச் சொல்ல அதைப் பூஜை செய்யும் பெண்களும் கூறி தங்களின் விளக்குகளுக்கும் மஞ்சளாலான விநாயகருக்கும் பூக்கள், மஞ்சள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர்.

தொடர்ந்து தீப, தூப அர்ச்சனைகள் செய்து ஸ்ரீ முத்துமாரி அம்மனை வழிபட்டனர். இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன. சுமங்கலி அருள் வேண்டி நடந்த இந்த திருவிளக்கு பூஜையின் சிறப்பம்சமாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்ப்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் பூரண நலம் பெற வேண்டி அம்மனை தரிசித்தனர். இந்நிகழ்வானது இரவு 7 மணி அளவில் நடைபெற்றது.
