சிவகங்கை அருகே தச்சன்புதுப்பட்டி வல்லநாட்டுக் கருப்பர், தச்சன்காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம் மற்றும் மது எடுப்புத்திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தச்சன்புதுப்பட்டி வல்லநாட்டுக் கருப்பர், தச்சன்காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 13.8.2024 -ல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் இரவில் கருப்பர்,அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகளிர் கும்மி கொட்டும் வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து திங்கள்கிழமை (19.8.2024) மாலை பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் முளைப்பாரிகளை ஊரின் மந்தைக்கூடத்துக்கு கொண்டு வந்து இறக்கி வைத்தனர். இதையடுத்து மகளிர் கும்மி கொட்டி வழிபட்டனர்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை மந்தையில் இருந்து மேள தாளங்கள் முழங்க முளைப்பாரிகளை தலையில் வைத்து கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் சுமந்து வந்து கோயிலை சென்றடைந்தனர். அங்கு கோயிலருகே உள்ள ஊருணியில் தங்களது நேர்த்திக்கடன் முளைப்பாரிகளை கரைத்தனர்.
இதையடுத்து கருப்பர் மற்றும் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.