கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பல்வேறு கிராம் பகுதியில் காட்டு யானைகள் உணவு தேடி உலா வந்து கொண்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றைக் கொம்பன் காட்டு யானையால் , பொதுமக்களும் அச்சம் அடைந்து உள்ளனர்.


இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானையை துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தி பிடித்துக் கொண்டு பொள்ளாச்சி டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் வைத்து வனத்துறையினர் பராமரித்து வந்தனர். பின்னர் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. அந்த யானை அப்பகுதியில் தண்ணீர் அருந்த சென்ற போது கீழே விழுந்து உயிரிழந்தது.


ரோலக்ஸ் யானை இருக்கும் வரை ஒற்றை கொம்பன் மற்றும் வேட்டையன் என்ற இரண்டு யானைகள் அப்பகுதிகளுக்குள் நுழைவதை குறைத்துக் கொண்டது. மேலும் சேதத்தை ஏற்படுத்தவில்லை, அப்பகுதியில் இருந்து ரோலக்ஸ் என்ற ஒற்றைக் காட்டு யானைய பிடித்துச் சென்ற பிறகு தொண்டாமுத்தூர் ஆலாந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒற்றைக் கொம்பனும், தடாகம், வரப்பாளையம் பகுதிகளில் வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானையும் பல்வேறு பகுதிகளுக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை தடுக்க வனத்துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை நரசீபுரம், அணைத்தோட்டம் ஈசா யோகா மையம் செல்லும் வழியில் உள்ள நரசீபுரம் குளம் தூர்வாரப்பட்டு வருகிறது. அங்கு இரண்டு ஜே.சி.பி வாகனங்கள் தூர்வாரிக் கொண்டு இருந்தது.இந்நிலையில் அப்பகுதியில் சென்ற ஒற்றைக் கொம்பன் காட்டு யானை அங்கு இருந்த ஒரு ஜே.சி.பி வாகனத்தை மோதுவது போன்று சென்றது அதனை அங்கு இருந்த ஒரு நபர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




