அதானி குழுமத்தில் நடந்த அனைத்து விவரங்கள் குறித்து ஆராய்ந்த நிபுணர் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளது.
அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து அதானி நிறுவனம் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளது.இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் கடந்த அமர்வு கூட்டத்தில் தினமும் அமளி ஏற்பட்டது. மேலும் ஹிண்டென்பர்க்கின் இந்த ஆய்வறிக்கையால் அதானி நிறுவனமும் சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இதில் ஹிண்டென்பர்க் அறிக்கையில் உள்ள அனைத்தும் பொய்கள் எனவும், இந்தியாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றும் அதானி குழுமம் பதில் அளித்தது மட்டுமில்லாமல், அதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”அதானி குழுமம் தொடர்பான முறைகேடு விவகாரங்களை முறையாக விசாரிக்க வேண்டும்.மேலும் முதலீடு செய்தவர்களுக்கு சரியான இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும். குறிப்பாக இந்த விவகாரத்தில் ஹிண்டென்பர்க் நிறுவனத்திடம் விசாரணை நடத்த வேண்டும்.இதுதொடர்பான விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். அதனை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ”செபி விதிகளின் எஸ்:19 என்பது மீறப்பட்டுள்ளதா, பங்கு விலையில் ஏதேனும் கையாடல் செய்யப்பட்டுள்ளதா என்பதை செபி அமைப்பு விசாரிக்க வேண்டும்.இதற்காக ஒரு சிறப்பு நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்படுகிறது.
அதில், ”ஓ.பி.பட், நீதிபதி ஜே.பி.தேவ்தத், நந்தன் நீல்ேகனி, கே.வி.காமத், சோமசேகரன் சுந்தரேசன் ஆகிய ஐந்து பேர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. மேலும் இந்த குழுவுக்கு உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமை வகிப்பார் எனவும், இந்த குழு இரண்டு மாதத்தில் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சமர்பிக்க வேண்டும் என கடந்த மார்ச் 2ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் படி அதானி குழும முறைகேடு தொடர்பான விவகாரத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கையை நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளது.
அதில், ”ஹிண்டென்பர்க்கின் ஆய்வறிக்கை, அதானி நிறுவனம் சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை சந்தித்தது, எந்த விதமான கையாடல் நடந்துள்ளது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கியுள்ளது.
இருப்பினும் இந்த விவகாரத்தில் செபி அமைப்பு தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய மேலும் ஆறு மாத அவகாசம் கேட்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதையடுத்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.