• Fri. Apr 26th, 2024

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓபிஆர் மீதான வழக்கின் பின்னணி என்ன?

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி மீது தேனி குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மிலானி. தி.மு.க மாவட்ட இளைஞரணி முன்னாள் செயலாளரான இவர், தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி தனித்தனியாக இரண்டு மனுத் தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.எஸ்-ன் மகன், ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாணப் பத்திரத்தில், உண்மையான சொத்து விபரங்களை மறைத்து பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும்.‌ எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மனுக்கள் மீதான விசாரணை மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் முன்னிலையில் ஜனவரி 6 மற்றும் ஜனவரி 7 இன்று ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.‌ விசாரணையில், மனுதாரரின் புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை அறிக்கையை வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.


மேலும் புகாரில் தெரிவிக்கப்பட்ட இருவரையும் வாரண்ட் இன்றி கைது செய்யக்கூடாது எனவும், மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் போடிநாயக்கனூர் சட்டமன்ற தினமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் ஆகிய இருவர் மீது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *