கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குறிச்சி விநாயகர் கோவில் பகுதியில், அத்திக்கடவு குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்துத் தகவல் கொடுத்தும் பல மணி நேரமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு.

கோவை, விளாங்குறிச்சி பிரதான சாலையில் அத்திக்கடவு குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. குழாயில் நீர் அழுத்தம் அதிகமாக இருந்ததால், தண்ணீர் சுமார் 15 அடி உயரத்திற்கு ஊற்றுப் போலப் பீய்ச்சி அடித்தது. இதனால் அந்தச் சாலையே வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சில வாகன ஓட்டிகள், பீய்ச்சி அடிக்கும் தண்ணீருக்கு அடியில் வாகனங்களை நிறுத்தி ‘வாட்டர் சர்வீஸ்’ செய்தபடி சென்றனர்.
குழாய் உடைந்த உடனேயே அப்பகுதி பொதுமக்கள் கோவை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்குப் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்து உள்ளனர். ஆனால், தகவல் தெரிவித்து 2 மணி நேரத்திற்கு மேலாகியும் எந்தவொரு அதிகாரியோ அல்லது ஊழியரோ சம்பவ இடத்திற்கு வந்து உடைப்பைச் சீரமைக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

“ஒருபுறம் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இப்படிச் சாக்கடையில் கலப்பது வேதனை அளிக்கிறது.
அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களின் அலட்சியத்தைக் காட்டுகிறது” எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.










