சபரிமலையில் இரவு 10 மணியுடன் நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடந்த மண்டல காலம் நிறைவுபெறவுள்ளது.
கார்த்திகை மாதம் திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மண்டல பூஜையுடன் நிறைவு பெறுகிறது. இதனால், சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்தாண்டு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து, சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையில் அதிகளவில் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 15-ஆம் தேதி கோயிலின் நடை திறக்கப்பட்டு 16-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்த 60,000 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர். முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், கார்த்திகை மாதம் திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மண்டல பூஜையுடன் நிறைவு பெறுகிறது. சபரிமலையில் இரவு 10 மணியுடன் நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடந்த மண்டல காலம் நிறைவுபெறவுள்ளது. முன்னதாக, நேற்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கிஅணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு நடக்கும் களபாபிஷேகத்துக்கு பிறகு 11.55 முதல் மதியம் 1 மணி வரை மண்டல பூஜை நடைபெறும். இதனால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மதியம் நடை அடைத்த பின், மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அத்தாழ பூஜைக்குப் பின் இரவு 9.50 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். பின்னர், மகர விளக்கு பூஜைக்காக கோயிலின் நடை மீண்டும் வரும் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். அன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை. டிசம்பர் 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் ஜனவரி 14ஆம் தேதி தரிசனம் நடைபெறவுள்ளது. மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே, சபரிமலையில் மண்டல கால பூஜையை முன்னிட்டு 40 நாட்களில் இதுவரை 11 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாகவும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை ரூ.78.93 கோடி என்றும் தேவசம் போர்டு தகவல் கூறியுள்ளது.
முன்னதாக, சபரிமலையில் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய தேவசம்போர்டு அனுமதி கொடுத்தது. மேலும், பக்தர்களின் எண்ணிக்கையை தினமும் 45,000இல் இருந்து 60,000 ஆக அதிகரிக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டது. எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் 38 கிலோ மீட்டர் தொலைவுள்ள பெருவழிப்பாதையும் திறக்கப்பட்டது. பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பகுதியில் உள்ள வனப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் சன்னிதானத்தில் இரவில் தங்குவதற்கு அனுமதி தரப்பட்டது. பம்பை ஆற்றில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யவும் அனுமதி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.