உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் மிகத் தொலைவில் உள்ளது என்று
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை முடிவிற்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையின் போது இருவரும் நேருக்கு நேர் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இதனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே பாதியிலேயே ஜெலன்ஸ்கி வெளியேறினார். உடனடியாக அவரை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியுமாறு அமெரிக்கா உத்தரவிட்டது.
அங்கிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு ஜெலன்ஸ்கி சென்றார். அவரை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் உற்சாகமாக வரவேற்றார். அத்துடன் உக்ரைனுக்கு இங்கிலாந்து முழு ஆதரவு வழங்கும் என்றும், உக்ரைனுக்கு இங்கிலாந்து என்றும் துணை நிற்கும் என்றும் கெய்ர் அறிவித்தார்.
இதன்பின் அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஷ்யா, உக்ரைன் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ரூ.16 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இதையடுத்து ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக லண்டனில் ஐரோப்பிய நாடுகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி மற்றும் ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, நார்வே, போலந்து, ஸ்பெயின், கனடா, பின்லாந்து, சுவீடன், ருமேனியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” அமெரிக்காவுடன் எங்களது நட்புறவு தொடரும் என்று நினைக்கிறேன். .மேலும் உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இன்னும் மிக மிக தொலைவில் உள்ளது” என்றார்.













; ?>)
; ?>)
; ?>)