நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள 11வது வார்டு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளியும், அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரே கட்டிட வளாகத்தில் இயங்கி வருகிறது.

நகராட்சி தொடக்கப்பள்ளியில் 120 மாணவர்களும்,6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உயர்நிலைப் பள்ளியில் 350 மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் தொடக்கப் பள்ளிக்கு மட்டுமே ஒரு கட்டிடம் உள்ளது. ஆனால் உயர்நிலைப் பள்ளிக்கு உள்ள இரண்டு கட்டிடமும் பழுதடைந்து, மோசமான நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியாமல் மரத்தடி நிழலில், தொடக்கப்பள்ளி கட்டிட வரண்டாவிலும் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் கழிவறை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாத சூழலில் உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கடந்த நான்கு வருட காலமாக பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய கட்டிடத்தை சாமந்தான் பேட்டை 11வது வார்டுக்கு உட்பட்ட பகுதியிலேயே கட்டித்தர வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இங்குள்ள இடத்திற்கு மாற்றாக வேறு பகுதியில் பகுதியில் உயர்நிலைப் பள்ளிக்கான கட்டிடம் கட்ட உள்ளதாக கூறப்படும் நிலையில் அதே ஊரில் புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தி கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இங்கு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் சீருடையுடன் பள்ளி வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களும் வகுப்பை புறகணித்து போராடிவரும் நிலையில் வட்டாட்சியர் நீலாயதாட்சி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ரவிசந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.சாமந்தான்பேட்டை 11வது வார்டுக்கு உட்பட்ட பகுதியிலேயே உயர்நிலைப் பள்ளி வகுப்பறை கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.