நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். புறம்போக்கு இடத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் அப்பகுதியை சேர்ந்த 33 குடும்பத்திற்கு இலவச பட்டாவை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் கடந்த வாரம் வழங்கினர்.

இந்த நிலையில் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய மற்றும் கட்டிடம் கட்டுவதற்கு மேல பூதனூர் கிராமம் தேர்வாகியுள்ளது. இதனிடையே குடிநீர் தொட்டி, போர் வெல், நெல் களம் என தங்களது பயன்பாட்டிலுள்ள இடத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலையோரத்தில் நாங்கள் வசிக்கும் கூரை வீட்டிற்கு பட்டா கொடுத்துள்ள மாவட்ட நிர்வாகம் சாலை விரிவாக்கத்துக்காக எப்போது வேண்டுமானாலும் தங்களது இடத்தை பறித்துகொள்ளலாம் என்று அச்சம் தெரிவித்துள்ள அப்பகுதி பெண்கள், அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் நாங்கள் பயன்படுத்தும் பொது இடத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம மக்களிடம் நாகை வட்டாட்சியர் நீலயாதாட்சி பேச்சு வார்த்தையில் வீடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மண் பரிசோதனை செய்வதற்கு திடீரென உபகரணங்களை ஏற்றி வந்த வாகனம் தீயணைப்பு நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மண் பரிசோதனை உபகரணங்களை ஏற்றி வந்த வாகனத்தின் முன்பு படுத்தும், வண்டியை உள்ளே அனுமதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினார்கள் . இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போலீசார் மற்றும் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தீர்வு காணும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள அப்பகுதி மக்கள், திருமருகல் ஒன்றியத்தில் பல இடங்கள் இருக்கும் உள்ள நிலையில் குட்கிராமமான மேல பூதனூர் கிராமத்தில் எங்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து தீயணைப்பு நிலையம் கட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய கட்டுமான பணியில் ஈடுபடுவதற்கு ஏற்ப பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மண்பரிசோதனை செய்யப்பட்டது.