மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அத்திப்பட்டி கிராம வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் பாலமுருகன்.
இவர் தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்.

இவர் தனது கிராம கோயிலான செல்லாயி அம்மன் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு தனது ஊருக்கு
பேரையூர் அத்திப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மதுரை வீரன் மற்றும் பேரையூர் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சக்திவேல், சக்கரை, முத்துக்காளை ஆகியோர்களை அழைத்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் திருவிழா முடிவற்ற நிலையில் பாலமுருகன் கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்துக் கொண்டு போடி அருகே உள்ள ஊத்தம்பாறை ஆற்றுக்கு குளிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
நேற்று மாலை 4 மணி அளவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக உத்தம்பாறை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எதிர்பாராத இந்த காட்டாற்று வெள்ளத்தில் கிராம நிர்வாக அலுவலர் மதுரை வீரன் அடித்துச் செல்லப்பட்டார்.
மற்ற நபர்கள் வெள்ளத்தில் இருந்து தப்பித்த நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மதுரை வீரனை கண்டுபிடிக்க முடியாத நிலையில் போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் இரவு எட்டு மணி வரை தேடிய நிலையில் மதுரை வீரன் உடல் கிடைக்காத நிலையில் இன்று அதிகாலையில் மீண்டும் மதுரை வீரனின் உடலை தேட துவங்கினர்.
அவர்கள் குளித்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தள்ளி மதுரை வீரனின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
முகம் சிதலம் அடைந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மதுரை வீரன் உடலை மீட்டு ஸ்ட்ரெச்சரை கயிறு மூலம் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் தோலில் சுமந்தவாறு தீயணைப்புத் துறையினர் உடலை கொண்டு வந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போடி குரங்கணி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சக அரசு ஊழியரின் கோவில் திருவிழாவிற்காக வந்த கிராம நிர்வாக அலுவலர் மதுரை வீரன் உயிரிழந்த சம்பவம் போடி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.