பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையத்தில் அதிகமான பயணிகள் சுற்றுலாவுக்கு வருகை தருகின்றனர். பெரிய ரயில் நிலையத்தில் நீண்ட நடைமேடையுடன் இருப்பதால் இங்கு மக்கள் பயன்பாட்டிற்கு வெளியேறும் வழி ஒன்று மட்டுமே உள்ளது. பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரயில் நிலையத்தின் பின்புறம் நான்கு வழி சாலை அருகே நுழைவு வாயில் அமைத்து தர வேண்டும் என்று திருவனந்தபுரத்தில் நடந்த ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வலியுறுத்தி பேசியிருந்தார்.

ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்வதாக கூறியதையடுத்து இன்று விஜய்வசந்த் எம்பி அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சுனாமி காலனி பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அந்தப் பகுதியையும் பார்வையிட்டு ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா தேவாலைய பங்குத்தந்தை அருட்பணி உபால்ட், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அருண், ஜவகர், தாமஸ், கிங்ஸிலின், சித்ரா அனந்த், உட்பட பலர் இருந்தனர்.