ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில்
ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாகியிருக்கும் திரைப்படம் “வானரன்”.
இத்திரைப்படத்தில் நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் மூத்த மகனுமான பிஜேஷ் நாகேஷ் அறிமுக கதாநாயகனாகவும் கதாநாயகியாக அக்ஷயா,லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் நாயகன் பிஜேஷ் நாகேஷ், வறுமையின் காரணமாக ஆஞ்சநேயர் வேடம் போட்டு வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்று அந்தக் காணிக்கையில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நாயகி அக்ஷயா உடன் காதல் வயப்படுகிறார். இருவரும் சம்மதத்துடன் திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.
சிறிது நாளில் அவரது மனைவி இறந்து விடுகிறார்.

இந்நிலையில் தனது மகள் தான் உலகம் என்று வாழும் பிஜேஷ் நாகேஷுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியாக அவரது மகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பல லட்சங்கள் செலவாகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
மகளை காப்பாற்ற அவர் துடிக்கும் போராட்டங்கள் என்ன என்ன? போராட்டத்தின் முடிவில் தன் மகளை காப்பாற்றினாரா இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை.
நாயகனாக நடித்திருக்கும் பிஜேஷ் நாகேஷ்,வறுமையில் இருக்கும் ஒரு தகப்பன் தனது மகளின் சிறுசிறு ஆசைகள் கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் தவிப்பை தனது நடிப்பால் பார்வையாளர்களின் மனதை கண்கலங்க வைத்துள்ளார் பிஜேஷ் நாகேஷ்.
படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார் நாயகி அக்ஷயா.

பிஜேஷ் நாகேஷ் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் விஜய் டிவி புகழ் வர்ஷா,சர்வ சாதாரணமாகவும், இயல்பாகவும் நடித்து படத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
வறுமையை ஒழிக்க பாடுபட்ட கேப்டன் விஜயகாந்தை இந்த படத்தின் மூலம் நம் கண் முன்னே அச்சு பிசராமல் அவரது முகபாவணையில் வந்து செல்கிறார் நாமக்கல் விஜயகாந்த்.
அதே போல மேடை கலைஞரான ஜூனியர் டி.ஆர் நடிப்பும் சிறப்பாக உள்ளது.
ஆதேஷ் பாலா, எஸ்.எல்.பாலாஜி, சிறப்பு தோற்றத்தில் வரும் லொள்ளு சபா ஜீவா, வெங்கட்ராஜ், சிவகுரு, ராம்ராஜ் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர்ஷாஜகான் இசையில் படத்தில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாகவும் ரசிக்கும் படியாகவும் உள்ளது.
காட்சிகளுக்கேற்றவாறு பின்னணி இசை பயணித்துள்ளது.
நிரன் சந்தரின் ஒளிப்பதிவு நிறைவாக இல்லாவிட்டாலும் குறைவாக இல்லை.

பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட கடவுள் வேடம் அணிபவர்களின் வாழ்வியல் மற்றும் அவர்களின் வறுமையோடு, தந்தை – மகள் உறவின் ஆழத்தையும், அழகியலையும் மனதுக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார்.
இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன்.
மொத்தத்தில், வறுமையோடு இருக்கும் தந்தை – மகள் உறவின் ஆழம் ‘வானரன்’