• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மஞ்சுவாரியாரை திட்ட வேண்டாம் உன்னி முகுந்தன் வேண்டுகோள்

தமிழில் தனுஷ் நாயகனாக நடித்த சீடன், தெலுங்கில் அனுஷ்காவின் பாகமதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன்.. கடந்த வாரம் இவர் மலையாளத்தில் நடித்த மேப்படியான் என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தை இவரே தயாரித்து இருப்பதால், இவரது திரையுலக நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள், தங்களது சமூக வலைத்தளத்தில் இந்தப்படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு அவரது படத்துக்கு விளம்பரம் செய்தனர். அப்படி செய்தவர்களில் நடிகை மஞ்சு வாரியரும் ஒருவர்

ஒரு வாரம் கழிந்த நிலையில் மஞ்சு வாரியாரின் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அந்தப்படத்தின் போஸ்டர் நீக்கப்பட்டது. இதனை அறிந்த உன்னிமுகுந்தன் ரசிகர்கள், இந்த போஸ்டரை எதற்காக நீக்க வேண்டும் என கேள்வி எழுப்பி கடுமையான வார்த்தைகளால் மஞ்சு வாரியரை விமர்சிக்க ஆரம்பித்தனர். .

இந்த தகவல் மஞ்சுவாரியரின் சமூக வலைத்தள கணக்கை நிர்வகித்து வரும் குழுவினரால் உன்னி முகுந்தனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனே ரசிகர்களுக்கு இதில் உள்ள உண்மை நிலவரம் என்ன என விளக்கும் விதமாக வேண்டுகோளுடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் உன்னி முகுந்தன்.

அதில், “மஞ்சு வாரியாரின் சோஷியல் மீடியா கணக்கை அவரது குழுவினர் தான் நிர்வகித்து வருகின்றனர். அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் இதுபோன்ற விளம்பரங்களையோ அல்லது வேறு செய்திகளையோ மற்றவர்களின் நட்புக்காக வெளியிடுவார்கள்.. ஆனாலும் ஒரு வாரம் கழித்து அவற்றை நீக்கி விடுவார்கள். இது அவர்கள் வழக்கமாக கடைபிடிக்கும் ஒரு நடைமுறை தான்.. இதை அவர்கள் என்னிடம் முன்கூட்டியே சொல்லியும் விட்டார்கள். அதனால் மேப்படியான் பட போஸ்டர் நீக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தயவுசெய்து மஞ்சு வாரியரை திட்டுவதை நிறுத்திவிட்டு, இந்தப்பிரச்சனையைஇத்துடன் முடியுங்கள்” என கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.