அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் இன்னும் பத்து நாட்களுக்குள் கட்சியில் இணைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வெளிப்படையான நிபந்தனை விதித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும் அதிமுக உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இயக்கத்தை தொடங்கியதிலிருந்து இன்று வரை இந்த இயக்கத்திற்காக அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணன் செங்கோட்டையன்.
இந்த இயக்கத்தை பல சூறாவளிகள் சுனாமிகள் தாக்கிய போதும் நிலையாக நின்று இந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக அனைத்து மக்களையும் அரவணைக்கும் நோக்கோடு அவர் பாடுபட்டு இருக்கிறார் என்பதை நாம் நன்றாகவே அறிவோம்.
அவர் அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் கழகம் ஒருங்கிணைய வேண்டும், ஒருங்கிணைந்தால்தான் மீண்டும் அம்மாவுடைய ஆட்சியை தமிழகத்தில் நிறுவ முடியும் என்பதை தான் தனது மனதின் குரலாக அவர் ஒலித்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய எண்ணம் அவருடைய மனசாட்சி சொல்வது போலவே கழகம் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவின் சக்திகள் பிரிந்து நின்றால் நாம் வெற்றி பெற முடியாது பல்வேறு சோதனைகளை நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாத ஒரு சூழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலை மாறி அதிமுக ஒருங்கிணைந்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய போராட்டமும். அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.