கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்துக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமாயின், திருப்பரங்குன்றம் சென்று பூரண சந்திரன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் இந்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்த நிலையில் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்..!

திருப்பரங்குன்றம் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட விவகாரத்தில், திமுக அரசின் போலிமுகம் தற்போது வெளிப்பட்டுள்ளதாக எல்.முருகன் கூறினார். திமுக பக்தர்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் சம்பவங்களும் நேற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை டிவிஷன் பெஞ்ச், கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திமுக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தொடக்கத்திலேயே ஒழுங்காக செயல்பட்டிருந்தால் இந்த பிரச்சனை உருவாகியிருக்காது என்றும், அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்ததாகவும் விமர்சனம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவில் தீபம் ஏற்ற வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும், தீபம் ஏற்ற வேண்டிய இடம் குறித்து
நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு பக்தர்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி, பக்தர்களுக்கு அங்கு சென்று வழிபடவும், கார்த்திகை தீபம் ஏற்றவும் முழு உரிமை உண்டு என வலியுறுத்தியதாக தெரிவித்தார். இந்த தீர்ப்பை தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை விதித்ததாகவும், மாநில தலைவர் கைது செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து பக்தர்களின் அடிப்படை உரிமையான கடவுள் வழிபாட்டை அடக்கும் முயற்சி நடந்ததாகவும் எல்.முருகன் கூறினார். மேலும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்காக அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக டிவிஷன் பெஞ்ச் மீண்டும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலை அறநிலையத்துறை இடித்து வருவதாகவும், அதனை தட்டி கேட்ட திருப்பூர் மாவட்ட மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாமக கூட்டணியில் இணைந்திருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கூடுதல் பலம் அளித்துள்ளதாகவும், நடிகர் விஜய்க்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்றும், ‘ஜனநாயகன்’ தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.




