ஜெர்மன் நாட்டில் உள்ள ஃலுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, ஃபிராங்க்பார்ட்-சென்னை, சென்னை-ஃபிராங்க்பார்ட் ஆகிய 2 விமானங்கள், இன்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதனால் ஜெர்மன், அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து செல்லும் 300 -க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் தவிப்பு.

ஜெர்மன் நாட்டில் உள்ள ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து, லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தினமும் நள்ளிரவு 12 மணிக்கு, சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் அதே விமானம், அதிகாலை 1.50 மணிக்கு, சென்னையில் இருந்து, ஃபிராங்க்பார்ட் நகருக்கு புறப்பட்டு செல்லும்.
இந்த விமானத்தில் ஜெர்மன் நாட்டிற்கு செல்லும் பயணிகள் மட்டுமின்றி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கும் இணைப்பு விமானமாக, இந்த விமானம், பயன்பாட்டில் உள்ளது. இதனால் இந்த லுப்தான்ஷா வருகை மற்றும் புறப்பாடு விமானங்களில், பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஃபிராங்க்பார்டில் இருந்து, சென்னைக்கு வரும் விமானமும், இன்று அதிகாலை சென்னையில் இருந்து ஃபிராங்க்பார்ட் செல்லும் விமானமும், ஆகிய 2 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இதனால் ஜெர்மன், அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்காட்லாந்துசெல்லும் சுமார் 300 -க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் அவதி அடைந்தனர்.
ஜெர்மன் நாட்டில் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், ஊதிய உயர்வு, பணிச்சுமையை குறைத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக, ஃபிராங்க்பார்ட்-சென்னை, சென்னை-ஃபிராங்பார்ட், ஆகிய 2 விமானங்கள் இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,இந்த விமானங்கள் ரத்து குறித்து ஏற்கனவே பயணிகளுக்கு, விமான நிறுவனம் தகவல் தெரிவித்து விட்டதாகவும், இதனால் பயணிகள் பெரும்பாலானோர் சென்னை விமான நிலையத்திற்கு வரவில்லை என்றும், தகவல் கிடைக்காத வெளியூர் பயணிகள் சிலர் வந்தவர்களுக்கு, தங்குவதற்கு, தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.