

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஜப்பானில் இன்று அதிகாலை சுனாமி தாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ்க்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் தைவானின் தலைநகர் தைபேவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.4 ரிக்டர் அளவு பதிவான இந்த நில நடுக்கம் தைவானில் பேரழிவை ஏற்படுத்தியது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு பயங்கரமான நிலநடுக்கமாக இது பதிவான நிலையில், உடனடியாக தைவானில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டது.
தைவானின் {ஹவாலியன் நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து நொறுங்கியது. உயிரிழப்புகள் குறித்த முதல்கட்ட தகவல்கள் வெளியாகவில்லை. ரயில்கள், பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர். அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 15 நிமிடத்தில் ஜப்பானின் யோனகுனி கடலோரத்தில் அலைகள் மிக அதிக அளவிலான உயரத்திற்கு எழும்பியது. இதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி பேரலைகள் கடற்கரையை தாக்கியது. அதேபோல அருகில் உள்ள மற்றொரு நகரின் கடலோரத்திலும் சுனாமி தாக்கியது.
ஜப்பானின் கடலோரப் பகுதியில் 3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஜப்பானின் ஓகினவா மாகாணத்தில் கடலோர பகுதியிலிருந்து உடனடியாக மக்களை வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

