• Tue. Jan 6th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

த.வெ.க புதிய வரலாறு படைக்கும் கட்சி – செங்கோட்டையன்..,

BySeenu

Jan 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் கட்சியாக உருவெடுத்து வருவதாக அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது…

களத்தில் தான் ஒவ்வொரு அரசியல் கட்சியின் உண்மையான நிலை தெரியும். மக்கள் அளிக்கும் வரவேற்பை பார்க்கும் போது தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தை பிடிக்கும் என்பது உறுதி. தற்போதுள்ள இரண்டு பெரிய கட்சிகளும் வேண்டாம், புதிய ஒரு கட்சி தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணமே மக்களிடையே அதிகமாக உள்ளது என்றார்.

ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே வெளியிடப்படுவதாகவும், அது மக்கள் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாக இருப்பதாகவும் கூறினார்.

உலகளவில் செல்வாக்கு மிக்க நபர்கள் குறித்த ஆய்வுகளில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலிடத்தில் இருப்பதாகவும், இரண்டாம் இடத்தில் பிரதமர் இருப்பதாகவும் சொல்லப்படுவதாக குறிப்பிட்டார். தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தில் இருப்பதால் அடுத்த முதல்வர் விஜய் தான் என்றே மக்களின் கருத்து நிலவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே “எடப்பாடி பழனிச்சாமி நூறாண்டு காலம் பொதுச் செயலாளராக இருந்தால் நல்லது” என கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், இதன் மூலம் இருவரும் ஒன்றாக செயல்படுகிறார்கள் என்பதே அதன் அர்த்தம் என விமர்சித்தார்.

“பொங்கல் வரை பொறுங்கள். தமிழக வெற்றிக் கழகத்தில் எத்தனை பேர் இணைவார்கள் என்பதை நீங்கள் நேரில் பார்ப்பீர்கள். நல்லவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அந்த இடத்தை நிரப்புபவர் விஜய் தான்” என்றார்.

ஒவ்வொரு திரைப்படம் வெளியான போதும் வளர்ந்து வரும் இயக்கத்திற்கு தடைகள் ஏற்படுவது இயல்பே என்றும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் அதுபோன்ற தடைகள் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்காலத்தில் கூட்டணியில் இடம் பெறுவார்கள் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.