• Sat. Apr 27th, 2024

பிபின் ராவத் உடலுக்கு இன்று குன்னூரில் அஞ்சலி

முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று குன்னூரில் அஞ்சலி நாளை டெல்லியில் அடக்கம்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் உடல் இன்று குன்னூரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் டெல்லி எடுத்துச் செல்லப்படுகிறது.

முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 12 ராணுவ அதிகாரிகள் ஆகியோர் நேற்று கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றுகொண்டிருந்தனர். ஹெலிகாப்டரை விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான் இயக்கினார்.அப்போது காட்டேரி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதில் பயணித்தவர்கள் சிதறி கீழே விழுந்தனர். பின்னர் தகவலறிந்து அந்தப் பகுதிக்கு விரைந்த மீட்பு படை சிதறிக் கிடந்தவர்களின் உடல்களை மீட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

ஹெலிகாப்டரின் எரிபொருள் டேங்க் முழுமையாக நிரப்பப்பட்டு இருந்ததால், அதில் பற்றிய தீ பல அடி உயரத்துக்கு எழுந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடித் தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.சம்பவ இடத்துக்கு நீலகிரி ஆட்சியர் அம்ரித், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளைப் பார்வையிட்டு துரிதப்படுத்தினர்.

இதில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட பிபின் ராவத், வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட பிரிகேடியர் லிடர், கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குர்சேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய்தேஜா, சத்பால் மற்றும் நான்கு பேர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் பிபின் ராவத், மதுலிகா ராவத் உட்பட உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று டெல்லி எடுத்துச் செல்லப்படுகிறது. வெலிங்டன் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இவர்களது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்காகக் கோவையிலிருந்து மருத்துவக் குழு சென்றுள்ளது.

இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர், ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்திரி, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் ஆகிய முப்படை தளபதிகளின் தலைமையில், முப்படை தலைமை தளபதிக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் சூலூர் விமான தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி எடுத்துச் செல்லப்படவுள்ளது. அங்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ அதிகாரிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.

இதனிடையே விபத்து குறித்து கேள்விப்பட்டு, சென்னையிலிருந்து கோவைக்குத் தனி விமானம் மூலம் வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக குன்னூர் சென்றார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு, தனி செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் சென்றனர்.

9 மணியளவில் குன்னூர் ராணுவப் பயிற்சி மையத்துக்குச் சென்ற முதல்வர், அங்கு நீலகிரி ஆட்சியர், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு விபத்து நடந்தது குறித்துக் கேட்டறிந்தார்.தொடர்ந்து, அங்குள்ள வருகை பதிவேட்டில் பிபின் ராவத்துக்கு இரங்கலை முதல்வர் ஸ்டாலின் பதிவு செய்தார். அதில், “தாய் திருநாட்டின் வீர திருமகன் விபத்தில் உயிர் இழந்ததற்கு நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *