கரூர் மாவட்டம்,குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சில இடங்களில் மிதமான மழை மற்றும் பல இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது.

கீழக்குறப்பாளையத்தில் அதிகாலை முதல் தற்போது வரை தொடர் மழை பெய்ததின் காரணமாக பழைய திருச்சி -கரூர் நெடுஞ்சாலையின் குறுக்கே இருந்த பெரிய சீத்தமுள் மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
சாலையின் குறுக்கே மரம் விழுந்ததை அடுத்து இரு புறங்களிலும் போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலை வழியாக மாற்றப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உதவியுடன் கொட்டும் மழையிலும் மரத்தினை மரம் அறுக்கும் இயந்திரத்தின் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.