தஞ்சாவூர் நெடுஞ்சாலை கோட்ட கட்டுப்பாட்டில் ஒரத்தநாடு நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுமார் 548 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலை ஓரங்களில் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 12,000 மரக்கன்றுகள் சாலை ஓரங்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டில் மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன் தஞ்சாவூர் நெடுஞ்சாலை கோட்டத்தில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நட உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து ஒரத்தநாடு நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் சுமார் 5000 மரக்கன்றுகள் சாலை ஓரங்களில் நட முடிவு செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒரத்தநாடு உதவி கோட்ட பொறியாளர் விவேகானந்தன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. இதுவரை மேல வன்னிப்பட்டு, உறந்தை ராயன் குடிகாடு, பருத்திக்கோட்டை, ஈச்சங்கோட்டை, பாச்சூர், காராமணித் தோப்பு, சில்லத்தூர், சிவவிடுதி, மணிக்கிரார்விடுதி, ஊரணிபுரம் மற்றும் பூவத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள சாலைகளில் சுமார் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மரக்கன்றுகளுக்கு மூங்கில் கூண்டு அமைத்து பச்சை துணியால் வலை சுற்றி தினமும் தண்ணீர் ஊற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற வடகிழக்கு பருவ மழையை பயன்படுத்தி சாலை ஓரங்களில் சுமார் 5000 மரக்கன்றுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி கோட்ட பொறியாளர் தெரிவித்தார்.