தருமபுரி மாவட்டத்தில் 3 வேளை உணவுடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து அந்தந்த மாவட்டத்திலேயே 7 நாட்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மேசன், கார்பெண்டர், கம்பிவேலை, தச்சு வேலை, மின் பணியாளர் வேலை. பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏ.சி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் போன்ற தொழில் இனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சித்தாள், கூலியாள் உள்ளிட்ட 12 தொழில் பிரிவுகளின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தருமபுரியில் உள்ள கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கி வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது.
பயிற்சியில் பங்குபெறும் தொழிலாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் கட்டணமில்லாமல் மதிய உணவு. காலை மாலை சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முடிவுற்றதும் ஊதியமாக ரூ.5600 (ரூபாய் ஐந்தாயிரத்து அறுநூறு) தொழிலாளர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பதிவு பெற்ற தொழிலாளர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தினை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பயிற்சி
