• Fri. Apr 26th, 2024

நாளை திருச்சியில் வணிகர் சங்க மாநாடு-மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- வணிக விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்

ByA.Tamilselvan

May 4, 2022

திருச்சியில் நாளை வணிகர் சங்க மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மே.5 வணிகர்தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 39-வது வணிகர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டிபல்வேறு வணிகர் சங்கங்களும் நாளை மாநாடு நடத்துகிறது.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே 54 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக மாநாடு நடத்துகிறார்.
தமிழக வணிகர் விடியல் மாநாடாக நடத்தப்படும் இந்த மாநாடு நாளை காலை 8.30 மணிக்கு கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.மாநாட்டில் காலையில் பரதநாட்டிய நிகழ்ச்சி, மக்கள் இசை நிகழ்ச்சி, குத்து விளக்கு ஏற்றுதல், மாநாட்டு தலைமை உரை, மாநாட்டு தீர்மானங்கள், கலை நிகழ்ச்சிகள் என மாலை 4 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி செல்கிறார். சென்னையில் இருந்து நாளை காலை 11 மணியளவில் விமானம் மூலம் புறப்படும் மு.க.ஸ்டாலின் 12.30 மணியளவில் மாநாட்டுக்கு சென்றடைகிறார்.அங்கு அவரை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வரவேற்று கவுரவிக்கிறார்.அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் முதுபெரும் வணிகர்களுக்கு வணிக விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.அப்போது வணிகர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவிப்பார் என தெரிகிறது. லுலு மார்க்கெட் ஒப்பந்தம் குறித்தும் விளக்கம் அளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *