• Sat. May 4th, 2024

இன்று உலக புத்தக தினம் : ஜவாஹிருல்லா எம்எல்ஏ வாழ்த்து

Byவிஷா

Apr 23, 2024

இன்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு, ‘வாசிப்போம் நேசிப்போம் மூச்சு போல சுவாசிப்போம்’ என தலைவர்கள் பலரும் வாசிப்பின் அவசியம் குறித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அறிவைப் பரப்புவதற்கும், உலகம் முழுவதும் பல்வேறு பண்பாடுகள் குறித்த விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும்”என யுனெஸ்கோ நிறுவனம்1995ல் பாரீஸில் நடைபெற்ற 28 வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதனைத் தொடர்ந்து 1995 ம் ஆண்டு முதல் ஏப்ரல் 23 ம் நாள் உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் புத்தகங்களை வாசிப்போருக்கும் புத்தகங்களை உருவாக்கும் ஆசிரியர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும், சுய சிந்தனைக்கும் வாசிப்பு மிகவும் அவசியம். நமது வரலாற்றையும், பண்பாட்டையும் வாசிப்பே நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. வாசிப்புப் பழக்கமானது வெறுமனே நூலறிவை மட்டும் வழங்குவதில்லை. மாறாகச் சிந்தித்துச் செயற்படும் ஆற்றலையும், முழுமையான நிதானத்தையும் வழங்குகின்றது.
இதனையே “வாசிப்பினால் மனிதன் பூரணம் அடைகின்றான்” எனக் குறிப்பிடுவர். “நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்பதற்கேற்ப பல நூல்களை வாசித்து நம் அறிவைப்பெருக்கிக் கொள்வோம். வாசிப்பை நேசிக்க இந்நாளில் உறுதி எடுப்போம்.
தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து படிக்கும் தேடலை வளர்ப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *