கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியில் கடாமானை சுருக்கு கம்பி வைத்து வேட்டையாடிய இரண்டு பழங்குடியினர் உட்பட மூன்று பேர் கைது. கடாமான் கறியை பாறையில் வைத்து காயவைத்து கொண்டிருக்கும் போது வனத்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர். நீலகிரி மாவட்டம் 60% வனபகுதியை கொண்டுள்ள நிலையில் இங்கு யானை,புலி,சிறுத்தை,கரடி, காட்டு எருமை,மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசிக்கக்கூடிய மாவட்டமாகும். சமீப காலமாக வனவிலங்குகள் சமூக விரோதிகளால் வேட்டையாடபட்டு வருகிறது. வனவிலங்கு வேட்டையை தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோத்தகிரி அருகே கட்டபெட்டு வனசரகத்திற்குட்பட்ட கூக்கல்தொரை பகுதியில் சிலர் கடமானை வேட்டையாடிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வனத்துறையினர் சென்ற போது அதே பகுதியில் வசித்து வந்த இரண்டு பேர் கடமான் கறியை பாறையின் மீது காயவைத்து கொண்டிருப்பதை கண்டு அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்களது வீட்டின் அருகே வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தில் சுருக்கு வைத்து கடமானை வேட்டையாடியதாகவும் இதில் மேலும் ஒருவருக்கு தொடர்புடையதாகவும் தெறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மூன்று பேரை கைது செய்த வனத்துறையினர் கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்பு சிறையில் அடைத்தனர். வேட்டையில் ஈடுபட்ட பிரகாஷ் மற்றும் பழங்குடியினர்களான சதீஷ்குமார், குமார் ஆகியோர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரை சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பத்துடன் வந்து கூக்கல் தொரை பகுதியில் தோட்ட வேலை செய்து வந்தது குறிப்பிடதக்கது.