தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 33ம் கட்ட விசாரணையை நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த 13 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த விசாரணை போலீசார் நடத்தக்கூடாது என, விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
இந்த ஆணைய அதிகாரி மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார். அதன்படி ஏற்கனவே 27 கட்ட விசாரணை நடத்தப்பட்டது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 1,052 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 719 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,126 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விசாரணை நடத்தப்படாத நிலையில், மீண்டும் விசாரணை தொடங்கியது. அதன்படி 28-வது கட்ட விசாரணையை துவங்கிய இந்த ஆணையம், நேற்று முதல் 33ம் கட்ட விசாரணையை நடத்திவருகிறது.
இந்த விசாரணைக்காக துப்பாக்கி சூடு நடைபெற்றபோது பணியில் இருந்த தென்மண்டல போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.