புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மஹாலட்சுமி பூஜை எனும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளியான இன்று நடைபெற்ற 2508 திருவிளக்கு பூஜையில் காரைக்கால், மற்றும் அடுத்துள்ள தமிழகத்தை சேர்ந்த பல்வேறு பகுதியிலிருந்து 2000ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கை அம்மனாக பாவித்து சிறப்பு பூஜை,அர்ச்சனை செய்து அருள்மிகு பத்ரகாளியம்மனை வழிபட்டனர்.2508 விளக்கு பூஜை முன்னிட்டு ஸ்ரீபத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்திலேயே 2508 திருவிளக்கு பூஜை அருள்மிகு ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் மட்டுமே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவில் ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்,அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீபத்ரகாளியம்மனை தரிசித்து அருள்பெற்றனர்.