புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமி கோயில் உள்ளது. இந்த ஐயப்பன் சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டிற்கான கார்த்திகை மாதம் ஸ்ரீ.தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமி கோயில் 26 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் நல்ல மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், தொழில் வளர்ச்சி பெருக வேண்டும், உலக அமைதி வேண்டியும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் வேண்டியும், திருமணம் ஆனவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீட்டிக்க வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த திருவிளக்கு பூஜையில் கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 1000கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தலை வாழை இலையில் மஞ்சள், குங்குமம்,பூ, பழங்கள் வெற்றிலை பாக்கு வைத்து தேங்காய் உடைத்து திருவிளக்கு பூஜை செய்து ஐயப்பன் சுவாமியை வழிபட்டனர். சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க பெண்கள் அனைவரும் ஐயப்பன் சுவாமியை வழிபட்டனர்.
இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். வருகை தந்த அனைத்து பெண்களுக்கும் பொங்கல் மற்றும் சில்வர் பாத்திரம் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிசாக வழங்கப்பட்டன.








