• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருக்கார்த்திகை தீபத் திருவிழா

ByKalamegam Viswanathan

Dec 13, 2024

திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருப்பரங்குன்றம் மலைமேல் அரோகரா கோஷம் முழங்க மகாதீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு.

திருப்பரங்குன்றம் மலைக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே மலை மேல் கார்த்திகை தீபம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை மேல் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினந்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, இன்று காலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் வீதி உலா வந்தனர். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு மலை மேல் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றும் மேடையில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இதற்காக நான்கு அடி உயரம் இரண்டடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை கொண்டு செல்லப்பட்டு 300 கிலோ நெய் நிரப்பப்பட்டு 150 மீட்டர் காடா துணியில் திரி
தயாரிக்கப்பட்டு கொப்பரையில் வைக்கப்பட்டது.

ஐந்து கிலோ கற்பூரம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, மூலஸ்தானத்தில் ஆறு மணிக்கு பால தீபம் ஏற்றியவுடன் மலை மேல் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது.

தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை தீபம் ஏற்றும் குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு கருதி மலை மேல் செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மலை மேல் ஏற்றப்பட்ட தீபம் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.