• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம்

Byவிஷா

Apr 25, 2025

அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி மீதான வழக்குகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக உட்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில், திமுகவின் அமைச்சர்கள் சந்திக்கும் சட்டரீதியான பிரச்சினைகள், அமைச்சரவை மாற்றத்துக்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021-ல் அமைந்த அமைச்சரவையில் க.பொன்முடி மற்றும் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். இதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கி முதலில் செந்தில்பாலாஜி பதவி இழந்தார். அதன்பின், சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று, தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால், மீண்டும் அமைச்சரானார்.
அதேபோல், உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால், செந்தில் பாலாஜியும் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 5-வது அமைச்சரவை மாற்றத்தின்போது, மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் சென்னை அன்பகத்தில் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம், பெண்கள் தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த விவகாரத்தில், அவர் மீது வழக்குப்பதிய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் கூறியுள்ளது.. அதேபோல், அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில், அமைச்சர் பதவியா? ஜாமீன் வேண்டுமா? என்பதை 28-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, மூத்த அமைச்சரான துரைமுருகன், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் விசாரித்து, 6 மாதத்துக்குள் விசாரணைகளை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுபோன்ற சட்ட நடவடிக்கைகள் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், உத்தரவுகளைப் பொறுத்து அமைச்சரவை மாற்ற அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.