ஈரோடு மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது :-

‘தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக நாடாளுமன்ற வார்டு மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு டாஸ்மாக் ஊழல் என பல ஊழல்கள் திமுக அரசில் உள்ளது. முதல்வர்தான் அரசை நடத்துகிறாரா ? தம்பிகள் தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனும் நிலை உள்ளது.
இந்த தோல்விகளை மறைப்பதற்காக மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக முதல்வர் வைத்துள்ளார்.
ஏற்கனவே பீஹார் தெலுங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஸ்டாலின் நடத்துவதற்கு எந்த வித மனதும் இல்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகின்ற அறிவிப்பை வெளியிட்டு இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி அவர்கள் சமூக நீதியின் உண்மையான தலைவராக இருந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு போலி சமூகநீதி பேசிக்கொண்டு ஸ்டாலின் அவர்கள் மறுசீரமைப்பு விவகாரத்தில் இல்லாத விஷயத்தில் திசை திருப்பி வருகிறார்.
பாராளுமன்ற விவகாரங்க துறை இதுகுறித்து எங்கும் பேசியதில்லை. பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதத்ததில்லை. பிரதமர் அவர்கள் தெளிவாக கூறி விட்டார்கள் யாருக்கும் எந்த மாநிலத்திற்கும் பாதகம் இல்லாமல் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என கூறியுள்ளார்கள்.
உள்துறை அமைச்சர் அவர்கள் கோவை வந்தபோதும் மறு சீரமைப்பு யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் மறுசீரமைப்பாக இருக்க வேண்டும் என கூறியிருந்தார். நாளை உள்துறை அமைச்சர் அவர்கள் மதுரை வர உள்ளார். அவர் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார். ஆனால் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல மக்களிடத்தில் பொய்யான திசை திருப்புதல் செயலை தமிழக முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்.
தமிழக முதலமைச்சராக அவர்கள் இதுபோன்ற விஷயங்களில் திசை திருப்பத்தை விட்டுவிட்டு அரசாங்கத்தை முறையாக நடத்த வேண்டும்’ என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில்,
காவல்துறை அதிகாரிகளுக்கான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் அது அவர்களது கடமை. அதேபோல அவரவரின் கருத்துக்களை சொல்வது என்பது அடிப்படை உரிமையாகும்.

திமுக அரசு முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளதாகவும் அதனை கண்டிக்கும் விதமாக முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக இந்த மாநாட்டை முன்னெடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாக ஆண்டு தோறும் காசி தமிழ் சங்கமும் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமும் ஆகிய நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருவதாகவும்.தமிழ் கடவுள் ஆன முருகன் மாநாட்டினை இங்கு நடத்துவது தான் சரியானது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.