கோவையில் உள்ள விநாயகர் கோவிலில் பக்தர்கள் போல் சென்ற ஆசாமி ஒருவர் கருவறையிலிருந்து வெள்ளி குத்துவிளக்கை திருடி சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள பெரிய விநாயகர் கோவிலில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு கோவிலில் பக்தர்கள் மற்றும் பூசாரி இல்லாததை நோட்டமிக்க நபர் சாதாரணமாக சாமி கும்பிட வந்த பக்தர்களை போல் கோவிலுக்குள் நுழைந்து யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு நேராக கருவறைக்குள் புகுந்தார் அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளி குத்து விளக்கை லாவகமாக எடுத்து தனது கையில் மறைத்துக் கொண்டு எவ்வித பதட்டமும் இன்றி வெளியே நடந்து சென்றார்.
சிறிது நேரம் கழித்து பூசாரி உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் விளக்கு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் அந்த நபர் உள்ளே நுழைவது முதல் கருவறை சென்று திருடிவிட்டு வெளியேறுவது வரை அனைத்து காட்சிகளும் மிகத் தெளிவாக பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவில் என்று பாராமல் தெய்வத்தின் சன்னதியில் கைவரிசை காட்டிய இந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டு பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் இதுபோன்று மற்ற கோவில்களில் நிகழாகாமல் இருக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.




