செக்காணூரணியில் நடைபெறும் அதிமுகவினரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறும் இடத்தின் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சீர்மரபினர் நல சங்கத்தினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் செக்காணூரணியில் கள்ளர் பள்ளிகள் விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் உண்ணாவிர போராட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்திற்கு எதிராகவும், அதிமுகவினரை கண்டித்தும் தமிழ்நாடு சீர்மரபினர் நலச் சங்க நிர்வாகிகள் செக்காணூரணி தேவர் சிலை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரமலைக்கள்ளர் உள்ளிட்ட 64 சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த DNC என்ற சான்றிதழை மாற்றி DNT என்ற ஒன்றை சான்று வழங்க கோரியும், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திய போது அமைதியாக அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக இன்று ஒரு சமூதாய மக்களுக்காக மட்டும் உண்ணாவிரத போராட்டம் என்ற பெயரில் நாடகம் செய்கிறது என குற்றம் சாட்டி கோசங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட சீர்மரபினர் சங்கத்தினரை குண்டுக்கட்டாக கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
அதிமுக போராட்டத்தின் அருகிலேயே சீர்மரபினர் சங்கத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.