• Sat. Jun 3rd, 2023

தீர்க்கதரிசி – சினிமா விமர்சனம்

ஸ்ரீசரவணா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர் B.சதிஷ் குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.படத்தில் அஜ்மல், நடிகர் அஜ்மலுடன், நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் துஷ்யந்த், ‘மத்திய சென்னை’, ‘காட்டு பய சார் இந்த காளி’ படங்களின் மூலம் பலரின் பாராட்டை பெற்ற நடிகர் ஜெய்வந்த், உமா பத்மநாபன், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் சத்யராஜ் படத்திற்கு திருப்பு முனை தரும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்களான P.G.மோகன் & L.R.சுந்தரபாண்டி இருவரும் இணைந்துஇயக்கியிருக்கிறார்கள்.எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை இப்போதே ஒருவர் சொன்னால் அவரை ‘தீர்க்கதரிசி’ என்பார்கள். அதுபோல நகரில் பல இடங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே காவல்துறைக்குச் சொல்லி அவர்களை உஷார்படுத்தும் ஒரு ‘தீர்க்கதரிசி’யின் கதைதான் இது.

சென்னை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நாள் அனாமதேய போன் கால் வருகிறது. அடையாரில் உள்ள ஒரு வீட்டில் தனித்திருக்கும் ஒரு வயதான பெண் ஒருவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் கொலை செய்யப்பட இருப்பதாக அந்த போனில் பேசியவர் சொல்கிறார். விளையாட்டாக யாரோ பேசுகிறார்கள் என்றெண்ணி கட்டுப்பாட்டு அறையில் அனைவரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

ஆனால் அடையாரில் ஒரு வீட்டில் தனிமையில் இருந்த வயதான பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து போகிறார். இந்த வழக்கினை இன்ஸ்பெக்டர்களான ஜெய்வந்தும், துஷ்யந்தும் விசாரிக்கிறார்கள்.
மறுநாளும் தொடர்ந்து “இன்று இரவு அண்ணா சாலையில் ஒரு விபத்து ஏற்படப் போவதாக” அதே நபர் போனில் அழைத்து எச்சரிக்கிறார். இந்த முறை அதீத கவனத்துடன் இருந்தும் கடைசி நிமிடத்தில் ஒரு காரும், லாரியும் மோதிவிட காரில் வந்தவர் இறந்து போகிறார்.போனில் முன்கூட்டியே சொல்லியும் இப்படி நடக்கிறது. தடுக்காமல் இருக்கிறார்களே என்பதால் இந்த வழக்கினை விசாரிக்க திறமையான அதிகாரியான துணை கமிஷனரான ‘ஆதித்யா’ என்ற அஜ்மலை அழைத்து அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்.அடுத்த தகவலாக “அண்ணா நகரில் இருக்கும் ஒரு வங்கியில் கோடிக்கணக்கான பணம் கொள்ளை போகப் போவதாக” தகவல் தருகிறார் தீர்க்கதரிசி. அஜ்மல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போட்டு வைக்க, அந்த வங்கியில் இருந்து கணிணி மூலமாக 72 கோடி ரூபாய் கையாடல் செய்யப்படுகிறது. ஆனாலும் அஜ்மல் தனது போலீஸ் டீமில் உள்ள தொழில் நுட்ப வல்லுநர்களை வைத்து அந்தப் பணத்தை மீட்டு விடுகிறார்.
இந்த நேரத்தில் இந்த விஷயங்கள் பத்திரிகை, டிவி வாயிலாக மக்கள் மத்தியில் பரவ, தகவல் சொல்லும் அந்த மர்ம நபரை ‘தீர்க்கதரிசி’ என்று மக்கள் பேச ஆரம்பிக்கிறார்கள்.அடுத்து “சென்னையில் ஆயிரம் வீடுகள் இருக்கும் ஒரு அபார்ட்மெண்ட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்படப் போவதாக” தகவல் தருகிறார் தீர்க்கதரிசி. அவர் சொன்னது போலவே ஒரு அபார்ட்மெண்ட்டில் கேஸ் சிலிண்டர் வெடிக்க ஒரு பெண்மணி இறந்து போகிறார்.
மொத்தத் தமிழகமும் இதைப் பற்றியே பேசத் துவங்க எதையாவது செய்து அந்த ‘தீர்க்கதரிசி’யை பிடிக்க நினைக்கிறது காவல் துறை. இறுதியில் அந்த ‘தீர்க்கதரிசி’ யார்..? அவரை காவல் துறை கண்டு பிடித்ததா..? அந்த மர்ம நபர் ஏன் இப்படி செய்தார்..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதி கதை. துணை கமிஷனராக நடித்திருக்கும் அஜ்மலின் உடல் தோற்றத்திற்குப் பொருத்தமான கதாப்பாத்திரம்தான். ஆனால் உடல் வலிமையைக் காட்டாமல் மூளைத் திறனைக் காட்டியே நடிக்க வேண்டியிருந்ததால், தன்னால் முடிந்த அளவுக்கு தனது கேரக்டருக்கு சிறப்பு செய்திருக்கிறார் அஜ்மல்.
இரண்டாவது நாயகர்களாக நடித்திருக்கும் ஜெய்வந்தும், துஷ்யந்தும் படத்தின் பரபரப்பை தாங்களே உருவாக்கி, நடத்தி, ஓட வைத்திருக்கிறார்கள். கட்டுப்பாட்டு அறையில் அதிகாரியான ஸ்ரீமன், காக்கி உடை அதிகாரிகளால் கண்டறிய முடியாத விஷயத்தை கடைசியில் தான் கண்டறிந்து சொல்வது கதையின் டர்னிங் பாயிண்ட்டாக அமைந்திருக்கிறது. ஸ்ரீமனும் படத்தில் தனது கேரக்டரை நிறைவாக செய்திருக்கிறார்.ஸ்ரீமனின் மனைவியாக வரும் தேவதர்ஷினியும், அப்பாவாக வரும் மோகன்ராமும் வெகு இயல்பாக நடித்து, அடுத்து இவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற சந்தேகத்தை நமக்குள் விதைக்கிறார்கள்.
மேலும் மனநல மருத்துவராக ஒய்.ஜி.மகேந்திரன் அப்படியே அந்தக் கதாப்பாத்திரத்திற்குப் பொருத்தமானவராக நடித்திருக்கிறார். கட்டுப்பாட்டு அறை அலுவலர்களாக மூணாறு ரமேஷூம், மதுமிதாவும் நமக்கு பிடித்ததுபோல நடித்திருக்கிறா்கள்.
கடைசி காட்சியில் வந்து படத்தை முடித்து வைக்கும் சத்யராஜ் தனது டிரேட் மார்க் அசால்ட்டு நடிப்பினால் கவர்கிறார். இவர் சொல்லும் கதையும், அதன் அடிநாதமும் தமிழகமே அறிந்த கதைதான் என்றாலும் இதை வைத்தே மொத்தப் படத்தையும் இணைத்திருப்பது சுவாரஸ்யமான திருப்பம்தான்.புதுமுக இசையமைப்பாளரான ஜி.பாலசுப்பிரமணியனின் பின்னணி இசை படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. அந்தோணி தாசன் பாடும் பாடல் காட்சி நமக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுக்கிறது.படத் தொகுப்பாளரின் பிசிறில்லாத தொகுப்பு சஸ்பென்ஸ், திரில்லரை கடைசிவரையிலும் கொண்டு போய் படத்திற்கு மெருகேற்றியுள்ளது.
புதுவகையிலான திரைக்கதையில், கடைசி காட்சியில் உடைபடும் சஸ்பென்ஸை தாங்கிக் கொள்ளும் கதையை அமைத்து சிறப்பான நடிகர், நடிகைகளை வைத்து சிறந்த முறையில் இயக்கம் செய்து 2 மணி நேரம் சிறப்பான வகையில் நமக்கு பொழுதைப் போக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் இரட்டை அறிமுக இயக்குநர்களான பி.ஜி.மோகனும் எல்.ஆர்.சுந்தரபாண்டியும்.
படம் எந்த இடத்திலும் தேங்காமல் திரைக்கதையின் வேகத்தில் மிக வேகமாகச் சென்றிருக்கிறது. செல்போன் தொழில் நுட்பத்தை வைத்துதான் கண்டறியப் போகிறார்கள் என்று நினைத்தால், கடைசியில் அது சாதாரணமான ஒரு சின்ன சந்தேகப் புள்ளியினால் உடைக்கப்படுவது செம டிவிஸ்டுதான்.தற்போதைய தமிழக முதல்வரை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் காட்சி சுவையானது. எதிர்பாராதது. குறையாகப் பார்க்கப் போனால் ஸ்ரீமன் கண்டறிந்து சொல்லும் அந்த உண்மைகளை அஜ்மல் டீம் ஏன் யோசிக்கவில்லை என்பதுதான். படம் முடிந்த பின்புதான் படத்தில் நாயகி என்ற ஒன்றே இல்லை என்பது நமக்கு நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு நம்மை மெஸ்மரிசம் செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.
தயாரிப்பு – B.சதிஷ் குமார் (ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்),
இயக்கம் – P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி,
இசை – பாலசுப்ரமணியம்.G, ஒளிப்பதிவு – ஜெ.லட்சுமண் குமார், கலை இயக்கம் – ப.ராஜூ,
படத் தொகுப்பு – C.K. ரஞ்சித் குமார், பாடல்கள் – விவேகா, விவேக், சண்டை இயக்கம் – டான் அசோக், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் – R.R. தீபன் ராஜ்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *