சென்னை பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 14-வது மாடியில் சமூக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இல்லத்தை இன்று அதிகாலை முதல் போலீசார் சுற்றிவளைத்தனர்.


கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் சினிமா தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டியது தொடர்பான ஒரு வழக்கு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு மடிப்பாக்கம் காவல் நிலையம் எப்படி சம்மன் அனுப்ப முடியும்?” என்ற கேள்வியை எழுப்பி, சவுக்கு சங்கர் தரப்பில் வழக்கறிஞர் மூலமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் 50க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். சவுக்கு சங்கர் வீட்டிற்குள் இருந்து கதவை திறக்க மறுத்து, தனது வழக்கறிஞரை வரவழைத்து போலீசாரிடம் விளக்கம் கேட்டதாகவும், ஆனால் போலீசார் தரப்பில் உரிய விளக்கம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டார்.
இதனிடையே, போலீசார் வீட்டின் கதவை உடைத்து சவுக்கு சங்கரை கைது செய்ய திட்டமிட்டு அதற்காக தீயணைப்புத் துறையினரை வரவழைத்தனர்.
தீயணைப்பு வீரர் படை வீரர்கள் ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் சவுக்கு சங்கர் வீட்டில் கதவு பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.
உள்ளே சென்ற போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர் அவரது செல்போன் லேப்டாப் ஆவணங்களை சோதனை செய்தனர்.
அதன் பிறகு அவரை கைது செய்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
திமுக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுவது தான் என்னுடைய கைது என சவுக்கு சங்கர் கோஷம் எழுப்பினர் போலீசார் அவரை வேனில் ஏற்றி விசாரணைக்கு அழைத்து சென்றனர்.




