• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

*தாலிக்குத் தங்கம் திட்டம் கொடுத்த**சமூகநீதிச் சிங்கம் அம்மா…*

*கேடிஆர் அதிரடி அரசியல் தொடர் -18*

திருமணம் என்பது பணக்கார வர்க்கத்தினருக்கு ஒரு கொண்டாட்டம். அதே நிலையில் திருமணம் என்பது ஒடுக்கப்பட்ட,  ஏழை மக்களுக்கு ஒரு போராட்டம்.
”மகளுக்குன்னு குண்டுமணி தங்கமாவது சேர்த்து வச்சிருக்கியா?” என்ற கேள்விகளை  கிராமப்புறங்களில் நம்மால் அவ்வப்போது காதுகளில் கேட்க முடியும்.  

நமது தமிழ் சமுதாயத்தில் ஏழை- பணக்காரர் மற்றும் இந்த சாதி, அந்த  சாதி என எந்த பேதமும் இல்லாமல் அனைத்து தரப்பினர் திருமணங்களிலும் இன்றியமையாததாக கருதப்படுவது தாலி.

திருமணம் என்ற உடனேயே ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நல்ல நாள் பார்த்து கூரை புடவையும் தாலிக்கு தங்கமும்தான் வாங்குவார்கள். இதற்காகவே வருடக் கணக்காக கூலி வேலை செய்து குருவி சேர்ப்பது போல பணம் சேர்த்து வைத்திருப்பார்கள்.

அவரவருடைய பொருளாதார நிலைக்கு ஏற்ற மாதிரி தாலியில் தங்கத்தின் அளவு வேறுபடும். மிகப்பெரிய பணக்காரராக இருந்தால் தாலியே தங்கமாக இருக்கும்.

இப்படிப்பட்ட தமிழ் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுடைய நிலையை புரிந்து கொண்டு ஒரு தாயின் அக்கறையான துடிப்போடு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்  கொண்டு வந்த திட்டம் தான் தாலிக்கு தங்கம்.

தமிழ்நாட்டில் திருமண நிதி உதவி திட்டங்கள் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலே நடைபெற்று வருகின்றன.

அந்த திட்டத்திலே ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா தேர்தல் அறிக்கையில், தாய்மார்கள் மனம் குளிரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதாவது 10 ஆம் வகுப்பு படித்த  ஏழைப் பெண்களின் திருமணத்தின் போது அவர்களுக்கு 4 கிராம் தாலிக்கான தங்கமும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும். மேலும் பட்டப்படிப்பு படித்த பெண்கள் திருமணம் செய்கையில் அவர்களுக்கு தாலிக்காக நான்கு கிராம் தங்கத்தோடு ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார் புரட்சித்தலைவி அம்மா.

மக்கள் பேராதரவு பெற்று 2011 இல் ஆட்சி அமைத்தவுடன் உடனடியாக பத்தாம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா.

தாலிக்கு தங்கம் என்ற இந்தத் திட்டம் மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தாய்மார்களை ஆனந்த கண்ணீர் கொள்ளச் செய்தது.



 நடுத்தர, அடித்தட்டு மக்களின் வர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, ஒரு தாயாக இருந்து புரட்சித் தலைவி செயல்படுத்திய இந்த திட்டம் பல்லாயிரக்கணக்கான தாய்மார்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்தது.

பெண்கள் சுயமாக சிந்தித்து தன் சொந்த கால்களில் நிற்க வேண்டுமென்றால் அதற்கு கல்வி அவசியம்.  ‘உனக்கு கல்யாணத்துக்கு வேற செலவு பண்ணனும்… உன் படிப்புக்கு எப்படி செலவு பண்ணுவது?’ என்று கேட்டு பல்வேறு குடும்பங்களில் பெண் குழந்தைகளை பத்தாவது மேல் படிக்க வைக்க தயங்கிய காலத்தில் தான்… “உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை படிக்க வையுங்கள். அவளின் திருமண செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அம்மா அவர்கள் தாலிக்கு தங்கம் திட்டத்தை அறிவித்தார்.

இதன்மூலம் ஏழை நடுத்தர பெற்றோர்களின் திருமண செலவு சுமை பெருமளவு குறைந்த அதே நேரம்… அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பத்தாம் வகுப்பு தாண்டி பிளஸ் டூ தாண்டி கல்லூரி வருவதற்கு மிகப்பெரும்  உந்து சக்தியாக அமைந்தது.

தாலிக்கு தங்கம் திட்டத்தினால்  சராசரி வருமானத்துக்கு கீழே இருக்கிற ஏழை குடும்பத்தினர் கூட, எப்படியாவது தங்கள் மகளை படிக்க வைத்து விட வேண்டும, அவளின் கல்யாணத்தை அம்மா பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கையோடு பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்ப ஆரம்பித்தார்கள்.

2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ்  பெண்களுக்கு 4 கிராம் தங்கம்   வழங்கிய முதலமைச்சர் அம்மா,  2016 மே 23ஆம் தேதி அடுத்த இன்ப அதிர்ச்சியை  அளித்தார்.

அதுவரை நான்கு கிராம் அதாவது அரைப்பவுன் தங்கத்தை தாலிக்காக அளித்த தாய் உள்ளம் கொண்ட முதலமைச்சர் அம்மா அவர்கள், அன்றிலிருந்து ஒரு பவுன் அதாவது எட்டு கிராம் தங்கம் என அறிவிப்பு வெளியிட்டார்.

ஏழைப் பெற்றோர்களின் பெண்களுக்கு மட்டுமல்ல இந்த திட்டம்… விதவை தாய்மார்களின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள் ஆகியோருக்கும்  தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார் புரட்சித்தலைவி அம்மா.

அதாவது ஒரு குடும்பத்தின் பொருளாதார சிக்கலை மட்டும் தீர்க்கும் வகையில் அல்லாமல், சமூக சிக்கல்களையும் தீர்க்கும் வகையில் இந்த திட்டம் சமூக நீதித் திட்டமாக அமைந்தது.

கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள்ளும் பெண்கள் ஆகியோருக்கும் இந்தத் திட்டத்தை அறிவித்ததன் மூலம் சமூக சீர்திருத்தத்திற்கு புரட்சித்தலைவி அம்மா எவ்வாறு பங்காற்றினார் என்பதை உணர முடியும்.

அம்மாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த காலகட்டங்களில் இந்த தாலிக்கு தங்கம் திட்டத்தினை எங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நான் அம்மாவின் பிரதிநிதியாக இருந்து மக்களுக்கு வழங்கியுள்ளேன்.

தாலிக்கான தங்கத்தையும் அந்த தொகையையும் பெற்றுக் கொள்ளும் போது அந்தப் பெற்றோர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நன்றிப் பெருக்கோடு எட்டிப் பார்க்கும்.  புரட்சித்தலைவி அம்மாவுக்கு நன்றி என வாய்நிறைய மனம் நிறைய  சொல்வார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இன்னமும் அம்மாவை தெய்வமாக வழிபடுவதற்கான மிக முக்கியமான திட்டமாக இந்த தாலிக்கு தங்கம் திட்டம் அமைந்திருக்கிறது.

தகுந்த நேரத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்ய முடியாமல் போனால் அந்த குடும்பம் சந்திக்கின்ற இன்னல்கள் இடர்பாடுகள் மிக அதிகம்.

தங்கத்தால் பணத்தால் எந்த ஏழை வீட்டு திருமணமும் நின்று விடக்கூடாது அவர்களின் வாழ்க்கையில் ஒரே கொண்டாட்டமான திருமணம் தடைபட்டு விடக்கூடாது என அம்மா சிந்தித்து சீர்தூக்கி சமூக சீர்திருத்த கண்ணோட்டத்தோடு கொண்டு வந்த இந்த திட்டம்!

அம்மா இந்தத் திட்டத்தை கொண்டு வந்ததே திருமண செலவு என்கிற காரணத்தைக் காட்டி கிராமப்புற பெண்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதால்தான்.

ஆனால் 2021 இல் திமுக அரசு வந்ததும்… தாலிக்கு தங்கம் திட்டம் எனப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் நிறுத்தப்பட்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது.

அப்போது மக்கள் மிகப்பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அம்மா தொலைநோக்கோடு தொடங்கி வைத்த இந்த திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்வோடு திமுக அரசு தடுத்து நிறுத்தியது.

நமது பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி யார் இது குறித்து சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பலமாக கேள்வி எழுப்பினார்.

இப்போது மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு தமிழக முழுவதும் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடி யார் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்திலும் தாலிக்கு தங்கம் திட்டம் திமுக அரசால் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். அது மட்டுமல்ல… மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் உடனடியாக துவங்கப்படும் என்றும் மக்களுக்கு உறுதி கொடுத்து வருகிறார்.

தொடரும் நமது எடப்பாடியாரின் கண்டனங்களின் காரணமாகவும்… 2026 தேர்தல் நெருங்குகிற அச்சத்தின் காரணமாகவும் இப்போது திமுக அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை செயல்படுத்துவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறது.

அம்மாவின் தொலைநோக்கு திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் தடுத்து நிறுத்திய திமுக அரசு, இப்போது தேர்தல் நெருங்குகிற காரணத்தால் சமூக நலத்துறை மூலமாக தங்கம் நாணயங்களை கொள்முதல் செய்வதற்கு டெண்டர் கோரி இருக்கிறது.

மக்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களுக்கு தெரியும் தாலிக்கு தங்கம் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப் போவது அம்மாவின் அரசுதான் என்று…

அம்மாவின் அடுத்த சமூக நீதித் திட்டம் என்ன?

வரும் வாரம் பார்ப்போம்