நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்த தேப்பிராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பஞ்சவர்ணம் – ராஜமாணிக்கம் தம்பதியினர். இவர்களின் மகன் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்ட நிலையில் தற்போது வயதான தம்பதிகள் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 52 ஆண்டுகளாக அரசு பட்டா வழங்கி கட்டிக் கொடுத்த வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களின் வீட்டுக்கு முன்பாக சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி அந்த கிராமத்தினர் ஏற்பாட்டில் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்த காம்பவுண்ட் சுவர் அந்த வயதான தம்பதியின் வீட்டிற்கு செல்லமுடியாத அளவிற்கு மறைத்து கட்டப்பட்டு வருவதால் வீட்டிற்கு செல்வதற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். இதனால் கோவிலை சுற்றி கட்டப்பட்டு வரும் சுவர் கட்டவதை நிறுத்த வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் காம்பவண்ட் சுவர் அமைக்கும் பணி வேகமாக நடைப்பெறுவதால் அதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர். அப்போது மூதாட்டி மண்ணெண்ணை பாட்டிலை புடவையில் மறைத்து எடுத்து வந்ததை கண்டுபிடித்த காவலர்கள் அவரிடமிருந்து மண்ணெண்ணை பாட்டிலை பிடிங்கி எடுத்துச் சென்றனர். தொடர்ந்து ஆட்சியர் ஆகாஷிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க வைத்தனர்.
இது குறித்து அப்பகுதியில் விசாரித்த போது ஊரே சேர்ந்து முடிவெடுத்து சுவர் கட்டி வருகிறோம். இதை எந்த அதிகாரிகள் வந்து தடுத்தாலும் சுவர் கட்டுவதை நிறுத்த மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். நாகை அருகே வயதான தம்பதி வசிக்கும் வீட்டை மறைத்து கோவில் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு எதிப்பு தெரிவித்து மூதாட்டி மண்ணெண்ணை பாட்டிலோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.