ஏர் கலப்பையுடன் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, ஆலங்குடி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.
நாம் தமிழர் கட்சிக்கு 117 பெண்கள், 117 ஆண்கள் என்று ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கிய பெருமை உள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து பெண்களுக்கும், ஒரே ஒரு ஆணுக்கும் என ஆறு வேட்பாளர்களுக்கு வழங்கிய கட்சியும் நாம் தமிழர் கட்சி தான்.
அந்த ஒரே ஒரு வேட்பாளர் வடகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் இருந்த நிலையிலும் தன்னை முதல் நிலை பட்டதாரி ஆக உயர்த்திக்கொண்டு விவசாயத்திற்கும் முன்னுரிமை கொடுத்து வருவதாக திகழ்ந்து வருபவர் ராஜாராம்.

இவருக்கு தேர்தல் போட்டியிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாய்ப்பு வழங்கியிருந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஆலங்குடி வடகாடு முக்கம் என்ற இடத்தில் இருந்து ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது வேட்டி சட்டையுடன் தலையில் பச்சை துண்டு முண்டாசு கட்டிக் கொண்டு இடதுபுறத் தோளில் ஏர் கலப்பையை வைத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தது அனைவரையும் வியக்க வைத்தது. அவருடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களும் ஆர்வலர்களும், பொறுப்பாளர்களும் வந்து கலந்து கொண்டனர்.





