மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள மள்ளப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சுகந்தவன பெருமாள் கோவில்.,

இந்த கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடைபெறுவதாகவும், தினசரி கோவிலை காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரம் வழிபாட்டிற்காக திறந்து வைப்பது வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.,
நேற்று மாலை வழக்கம் போல கோவிலை வழிபாடுகள் முடிந்த பின் நிர்வாக குழு உறுப்பினரான ரமேஷ் பூட்டிவிட்டு சென்றிருந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் மீண்டும் கோவிலை திறக்க வந்த போது கோவிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் கோவிலில் சோதனை செய்த போது உண்டியல் மற்றும் பிரோ-வை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
கோவிலில் இருந்த மின்சாரத்தை துண்டித்துவிட்டு இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியதால், சிசிடிவி காட்சிகள் பதிவாகவில்லை என்றும், பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் கோவிலில் இருந்த கம்பி உள்ளிட்ட பொருட்களை வைத்தே, உண்டியல் மற்றும் பிரோ-வை உடைத்து அதில் இருந்தவற்றை திருடிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.