• Sat. May 4th, 2024

தமிழக அரசின் டெண்டரை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!

Byவிஷா

Nov 22, 2023

தமிழக அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் நியமனங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் நிரப்பப்படும் என அறிவித்து அதற்கான டெண்டரை அறிவித்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அரசின் டெண்டரை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
	மத்திய அரசு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை  தனியார் மயமாக்குகிறது என பேசி வந்த திமுக தற்பொழுது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  குறிப்பாக ஒரு பொதுத்துறை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்றால் அதை தனியார் மையத்திற்கு விடும்பொழுது அதன் மூலம் அரசுக்கு லாபம் கிடைக்கும், பராமரிப்பு செலவு குறையும், அந்த துறை மக்களுக்கு தேவையான சேவையை செய்யும், ஆனால், அரசு என்பது, லாபத்தை கணக்கில் கொள்ளாமல், பொதுமக்களின் சேவையை கணக்கில் கொண்டுதான் செயல்பட வேண்டும். ஆனால்,  பல ஆண்டு களாக தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்து வந்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்ததும் பல பணிகளை தனியாரிடம் தாரை வார்த்து வருகிறது,.  தற்பொழுது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை தனியார் மையத்துக்கு விடுவது குறித்து விமர்சனம் கிளம்பியுள்ளது.
	சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிக்க முடிவு செய்து டெண்டர் விடுத்துள்ளது. இதற்கு தொழிற்சங்கத்தின் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதை  அபாயகரமான சோதனை எனத் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
	சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம், ஓட்டுநர், நடத்துநர்களை நியமிப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

	இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் குறித்து தொழிலாளர் நலத் துறை ஆய்வுக்கு எடுத்து, தற்போதைய நிலையே நீடிக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகம் இந்த டெண்டரை கோரியிருக்க கூடாது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொழிலாளர் நலத் துறை ஆணையரின் அறிவுறுத்தலுக்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை எனவும், பல ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு வராததால் ஏற்பட்ட ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதனால் நிரந்தர ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதும் தடுக்கப்படும் எனவும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
	இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிப்பது ஊதிய முரண்பாடுக்கு வழி வகுக்கும் எனவும், இது அபாயகரமான சோதனை எனவும் தெரிவித்து, டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துநர்கள் நியமிக்கப்பட்டால் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படாது எனவும், தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்படும் ஓட்டுநர்களால் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் எழும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
	மேலும், மாநகர போக்குவரத்து கழகம் மட்டுமல்லாமல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகத்திலும் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப வல்லுனர்கள் காலிப் பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *