• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

Byஜெ.துரை

Mar 21, 2025

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘வீர தீர சூரன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் இயக்குநர் எஸ். யூ. அருண்குமார், நடிகர் பிருத்வி, இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் கலை இயக்குநர் பாலசந்தர், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா மற்றும் தயாரிப்பாளர் ரியா ஷிபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வருகை தந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர் ரியா ஷிபு, அவருக்கே உரிய பாணியில் உற்சாகமாக வரவேற்றார்.‌ இந்நிகழ்வில் நடிகர் பிருத்வி பேசுகையில்,

ஆந்திர திரையுலகில் பவன் கல்யாணுக்கு என்ன ஓப்பனிங் உள்ளதோ…! அதே அளவிற்கு இங்கு விக்ரமிற்கும் ஓப்பனிங் உள்ளது. எஸ். ஜே. சூர்யாவிற்கு நடிப்பை விட அவரது குரல் கணீர் என்று வித்தியாசமாக இருக்கும். அதற்கும் தனி ரசிகர்கள் உண்டு.
படப்பிடிப்பு தளத்தில் நடிகை துஷாரா விஜயனின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. என்றார்.நடிகை துஷாரா விஜயன் பேசுகையில்,

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய திரையுலக பயணத்தில் ‘ வீர தீர சூரன் ‘மிக முக்கியமான படமாக இருக்கும். இது போன்ற திறமையான நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியாது. எனக்கு கிடைத்திருக்கிறது.

இது எனக்கு மிகப்பெரிய மேடை என நினைக்கிறேன். விக்ரம் சார் நடித்த படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருக்கிறேன். சினிமாவுக்காக அவருடைய அர்ப்பணிப்பு என்பது போற்றத்தக்கது. அவருடைய உழைப்பு. அனைவருக்கும் மோட்டிவேஷனலாக இருக்கும்.

என் வாழ்க்கைக்கு ஒரு காதல் பாடலை அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஜீ.வி. பிரகாஷ் குமார். எஸ். ஜே. சூர்யாவுடன் நான் நடிக்கும் இரண்டாவது படம். இன்னும் நிறைய படங்களில் அவருடன் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் 27ஆம் தேதியன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசுகையில்,

எனக்கு தமிழும், தமிழ் சினிமாவும் மிகவும் பிடிக்கும். இந்த ஆடியோ விழாவில் தான் ஜீ.வி. சாரை நேரில் சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் சார். நானும் உங்கள் ரசிகன் தான். உங்களுடைய இசையில் வெளியான’ கோல்டன் ஸ்பேரோ என்னுடைய ஃபேவரைட் சார். தமிழ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநர் அருண்குமாருக்கு நன்றி. அவர் உண்மையான மனிதன். தங்கமான மனிதன். அவருடைய இயக்கத்தில் வெளியான ‘சித்தா’ படத்தை பார்த்தேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இந்த படத்தில் பணியாற்றிய போது ‘சித்தா’ படத்தை விட வேற லெவலில் அவருடைய உழைப்பு இருந்ததை பார்க்க முடிந்தது. அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகனாகவும் மாறிவிட்டேன். இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் தற்போது கொஞ்சம் கொஞ்சம் தமிழை பேச கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணமே இயக்குநரும், இந்த படக் குழுவினரும் தான். இந்தப் படம் வெளியான பிறகு இயக்குநருக்கு நான் மலையாளம் சொல்லித் தருவேன்.

விக்ரம் சார் மிகப் பெரிய நடிகர் என அனைவருக்கும் தெரியும். அவருடன் நடிக்கும்போது அவர் நடித்த கதாபாத்திரங்கள் எனக்கு வரிசையாக நினைவுக்கு வந்தது. அதுபோன்ற கதாபாத்திரத்தை எல்லாம் இவர் தானே நடித்தார்..! என்று அவரை நான் வியந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். விக்ரம் சார் ஐ லவ் யூ. நானும் உங்களின் ரசிகன் தான்.

எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான ‘நியூ ‘படம் பார்த்த பிறகு அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன். அதற்குப் பிறகு அவர் வெரைட்டியான கேரக்டரில் நடித்தார். பிறகு அவருடைய நடிப்பிற்கும் நான் ரசிகன் ஆகிவிட்டேன். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் வைத்திருப்பார். அதுவும் எனக்கு பிடிக்கும். அவர் நடிப்பில் வெளியான ‘இறைவி’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை நான் அவரிடமே சொல்லி இருக்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஹெச் ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘முரா ‘படத்தில் நான் நடித்திருக்கிறேன். இதற்காக கடுமையாக உழைத்த தயாரிப்பாளர் ரியா ஷிபுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்திற்காக மார்ச் 27ஆம் தேதியன்று வெளியாகிறது. திரையரங்கத்திற்கு நீங்கள் வரும்போது உங்கள் நண்பர்களையும், குடும்ப உறுப்பினர்களையும், அனைவரையும் அழைத்துக் கொண்டு வர வேண்டும். இது என்னுடைய பணிவான வேண்டுகோள். ”இந்த படம் ஒரு தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் மூவி தான். சாதாரண படம் அல்ல . ஃபர்ஸ்ட் சீனிலிருந்து இல்ல.. ஃபர்ஸ்ட் ஷாட்ல இருந்தே கதை ஆரம்பிச்சுடும். அதனால இந்த படம் பார்க்கும்போது அஞ்சு நிமிஷம் முன்னாடியே தியேட்டருக்கு வந்துடுங்க. டோன்ட் மிஸ் பர்ஸ்ட் ஷாட்” என்றார்.

இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,

சீயான் விக்ரமுடன் நான் இணைந்து பணியாற்றும் நான்காவது படம் இது. ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’, ‘தங்கலான் ‘, ‘வீரதீர சூரன்’ இந்த நான்கு படங்களும் அழுத்தமான கதையம்சம் உள்ள படங்கள். இந்த நான்கு படங்களும் அவருக்கும், எனக்கும் சவாலானதாக இருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றும்போது சவாலாக இருக்கும் என்பதால் சந்தோஷத்துடன் பணியாற்றுவேன்.

அருண்குமாருடன் முதல் முறையாக இணைந்திருக்கிறேன். மிகவும் திறமைசாலி.

‘மார்க் ஆண்டனி’ படத்தில் நானும், எஸ். ஜே. சூர்யாவும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து இந்த படத்திலும் இணைந்திருக்கிறோம். துஷாரா மற்றும் சுராஜ் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

இது ஒரு டார்க்கான பிலிம். இந்த படத்திற்காக ‘அசுரன்’ படத்தின் தொனியில் பின்னணி இசை அமைத்திருக்கிறேன். மிகவும் சவாலானதாக இருந்தது. ஒவ்வொரு மியூசிக்கல் ஸ்கோரும் மூன்று நிமிடம் நான்கு நிமிடம் என தொடர்ந்து இருக்கும். படம் பார்க்கும்போது இந்த பின்னணி இசை உங்களுக்கு பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் ‘வீரதீர சூரன்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றி அடையும்” என்றார்.

நடிகர் எஸ். ஜே. சூர்யா பேசுகையில்,

மிகவும் சந்தோஷம். இந்தப் படம் அருமையான படம். வித்தியாசமான படம். பொழுதுபோக்கு என்பது பல வகையில் இருக்கும். ஜாலியாக சிரிக்க வைப்பது ஒரு பொழுதுபோக்கு. அந்தப் படத்திற்கும் பெரும் வரவேற்பு இருக்கும். ‘பிதாமகன்’, ‘சேது’ போன்ற படங்களுக்கும் பெரும் வரவேற்பு இருக்கும். ஜீ. வி. பிரகாஷ் சொன்னது போல் ‘அசுரன்’ போன்ற படத்திற்கும் வரவேற்பு இருக்கும். இந்தப் படம் ‘டிபிகல்’லான அருண்குமாருடைய படம். அருண்குமார் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் ரசிகர். ஒரு ஆங்கில தரத்தில்.. தமிழ் மண்ணில் எடுக்கப்பட்ட ஒரு தமிழ் படம் . மிக அற்புதமான படம். இந்த படத்தில் நடிக்கும் போது மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தில் நீங்கள் புது எஸ் ஜே சூர்யாவை பார்ப்பீர்கள்.

நான் எப்போதும் என்னை இயக்குநர்களிடம் ஒப்படைத்து விடுவேன் . அவர்களுக்கு என்ன தேவையோ ..! அதை நான் அப்படியே கொடுத்து விடுவேன். ‘இறைவி’யில் ஆரம்பித்த அந்தப் பயணம்.. இன்று இந்த உயரத்திற்கு வந்திருக்கிறது. குணச்சித்திர நடிகர் என்பது ஒரு ரூட் . நான் எப்போதும் வில்லன். ஹீரோ. கதையின் நாயகன் …எதிர் நாயகன் … ஆனால் நாயகன்.

வீர தீர சூரன் படம் தரமான சம்பவமாக வந்திருக்கிறது. இந்தப் படத்தில் அனைவரும் இயக்குநருக்கு என்ன வேண்டுமோ..! அதனை மையப்படுத்தி உழைத்திருக்கிறோம்

ரியா ஷிபு – ஷிபு தமீன்ஸ் – துஷாரா விஜயன் – பிருத்விராஜ் – சுராஜ் வெஞ்சரமூடு – ஜீ வி பிரகாஷ் குமார் – மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சீயான் விக்ரமுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது. அவர் தமிழ் சினிமாவின் கௌரவம். மிகச் சிறந்த நட்சத்திர நடிகர். இந்தப் படத்தில் அவர் கடினமாக உழைத்திருக்கிறார். வீரதீர சூரன் வெற்றிவாகை சூடும். இப்படத்தில் நான் பின்னணி பேசிய விதத்தை தொலைபேசி மூலம் அழைத்து ஒரு மணி நேரம் விக்ரம் சார் என்னை பாராட்டினார்.‌ இது இந்தப் படத்தில் நான் நடித்ததற்காக கிடைத்த முதல் விருது. இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் பேசுகையில்,

முதலில் இப்படத்தின் தயாரிப்பாளரான ஷிபு சார் மற்றும் ரியா ஷிபுவிற்கு நன்றி. இந்தப் படத்தில் இதயபூர்வமான மனிதர்களுடன் பணியாற்றினேன். நான் ‘தூள்’ திரைப்படத்தை மதுரை சிந்தாமணி திரையரங்கத்தில் பார்த்திருக்கிறேன். அவரை இயக்குவதற்கு கிடைத்த வாய்ப்பிற்காக ‘சீயான்’ விக்ரமுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் . ஆனால் இப்போதும் ஒரு காட்சியின் போது என்ன? எப்படி ?நடிக்க வேண்டும் என கேட்கிறார். ‘என்னப்பா செய்யணும்..?’ என்று அவர் கேட்பது என்னை பயமுறுத்தும். அதற்கு நான் முதலில் தயாராகி இருக்க வேண்டும். ஏற்கனவே விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி இருக்க வேண்டும். அந்த வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது.

அதே சிந்தாமணி திரையரங்கத்தில் ‘ நியூ ‘படம் பார்த்தேன். சூர்யா சார். ஐ லவ் யூ. நான் உங்கள் ரசிகன். என்னை நம்பி இந்தப் படத்தில் பணியாற்றியதற்கு நன்றி.

சுராஜ் சாரின் உழைப்பிற்கும் நான் மிகப்பெரிய ரசிகன்.

நான் இளையராஜாவின் பாடல்களை கேட்பேன். அதன் பிறகு ஜீவிபியின் பாடல்களை தான் அதிகமாக கேட்டிருக்கிறேன். அவருடைய மெலடி மனதில் புகுந்து இம்சிக்கும். இந்தப் படத்தின் மூன்று பாடல்களுக்கும்.. அவர் போட்ட முதல் ட்யூனே ஓகே ஆகிவிட்டது அத்துடன் இப்படத்திற்கு பின்னணி இசையை பார்த்து பிரமித்து விட்டேன். இதற்காக ஜீ. வி. பிரகாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

துஷாரா விஜயன், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்ச் 27ஆம் தேதி ‘வீரதீர சூரன்- பார்ட் 2’ வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

சீயான் விக்ரம் பேசுகையில்,

இங்கு வந்தவர்கள் படத்தைப் பற்றி நிறைய விசயத்தை சொன்னார்கள். அதை கேட்டும், பார்த்தும் ரசித்தேன். நான் படத்தைப் பற்றி பேசுவதை விட படம் உங்களிடம் நிறைய பேசும். நாங்கள் சொல்ல வேண்டிய விசயங்கள் அனைத்தும் படத்தில் இருக்கிறது.

பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்.

‘சித்தா’ என்றொரு படத்தை பார்த்தேன். அந்தப் படத்தை பார்த்த பிறகு, இயக்குநர் அருண் குமார் என்று அழைத்ததை விட ‘சித்தா’ என்றுதான் அழைத்திருக்கிறேன். அந்த அளவிற்கு அந்தப் படம் என்னை பாதித்தது. ‘சித்தா’ சிறந்த படம். அவர் எந்த படத்தை இயக்கினாலும்.. அதை வித்தியாசமாக இயக்குகிறார். ‘சித்தா’ படத்தை பார்த்த பிறகு இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். அதுதான் வீரதீர சூரன்.

என்னுடைய ரசிகர்கள் நீண்ட நாட்களாக சீயான் விக்ரம் வேற மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்று நானும் காத்திருந்தேன். அதற்காக முயற்சி செய்து கொண்டு தான் இருந்தேன். இயக்குநர் சொன்ன கரு எனக்கு பிடித்திருந்தது. அவருடைய ஸ்டைலும் எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தோம். ரசிகர்களுக்காக ரகளையான ஒரு படம் . ஆனால் ஒரு எமோஷனலான படம். ‘சேதுபதி’ மாதிரி இருக்க வேண்டும்… அதில் ‘சித்தா’ போன்றதொரு விசயம் இடம் பிடித்திருக்க வேண்டும் என நினைத்தேன். அந்த மாதிரி படம்தான் வீரதீர சூரன். ரசிகர்களுக்காக உருவாகி இருக்கும் திரைப்படம்.

இந்தப் படத்திற்கான பயணத்தின் போது என்னுடன் அருண் இருந்தார் என்பது மிகப்பெரிய பலமாக இருந்தது.‌ இன்ஸ்பிரேஷன் ஆகவும் இருந்தது. அருண் குமார் என்னுடைய வாழ்க்கையில் ஒரு நண்பராகிவிட்டார்.

எஸ் ஜே சூர்யா ஒரு ராக் ஸ்டார். ஓய்வே இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது கூட எங்கள் படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக தெலுங்கில் பேச உள்ளார்.‌

இந்தப் படத்தை நாங்கள் எந்த அளவிற்கு நேசித்து உருவாக்கினோமோ.. அதே அளவிற்கு தயாரிப்பாளர் ரியா ஷிபுவும் நேசத்துடன் ஆதரவளித்தார். அற்புதமான தயாரிப்பாளர். அவருடைய எனர்ஜி ஸ்பெஷல் ஆனது. எதிர்காலத்தில் அவருடைய தந்தையை விட மிகப்பெரிய தயாரிப்பாளராக திகழ்வார்.

எனக்கு எப்போதும் ஜீ.வி. பிரகாஷ் குமார் லக்கி. என்னுடன் இணைந்து பணியாற்றிய படங்களில் எல்லாம் அனைத்து பாடல்களும் ஹிட். எல்லா இன்டர்வியூவிலும் அவருடைய இசை இன்னொரு கதாநாயகன் என்று சொல்லி இருக்கிறேன். அவர் என்னுடன் இணைந்து பணியாற்றிய எல்லா படத்தின் கதையும் வித்தியாசமானதாக இருந்தது. அவற்றில் எல்லாவற்றிலும் இசையும் முக்கியமானதாக இருந்தது. இதற்காக ஜீவி பிரகாஷ் குமாருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள்,நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இயக்குநர் எஸ். ஜே. சூர்யாவிற்கு மிகப்பெரிய ரசிகன். அவர் படங்களில் நடித்திருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றும் போது தான் அவருடைய நடிப்பை ரசித்தேன். அவர் இந்த படத்தில் அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அதில் அவர் ஸ்டைலிஷாக நடித்திருக்கிறார்.

சுராஜ் – படத்தில் மட்டுமல்ல இன்டர்வியூலும் கலக்குகிறார். அது ஒரு மீம் கன்டென்ட்டாக மாறிவிட்டது. அவரும் ஒரு சிறந்த நடிகர். படத்தில் இடம்பெறும் 15 நிமிட நீளமான காட்சி ஒன்றில் அவர் வசனம் பேசிக்கொண்டே அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

துஷாரா விஜயன் – கலைவாணி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். ஒரு சண்டை பயிற்சி கலைஞர் கூட நடிக்க தயங்கும் காட்சியில் இவர் துணிச்சலாகவும், அற்புதமாகவும் நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு அவர் நடிப்பு பேசப்படும். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அதற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் என் அன்பான ரசிகர்களுக்கானது. நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை. இது உண்மை நான். ஒவ்வொரு விசயத்தை செய்யும் போது உங்களை நினைத்து தான் செய்கிறேன். என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான். என்றார்.