விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் கோதை நாச்சியார்புரம், பூசாரி நாயக்கன்பட்டி, கங்கரக்கோட்டை, மார்க்கநாதபுரம்,விஜய கரிசல்குளம், பாறைப்பட்டி வால்சாபுரம், பாறைப்பட்டி, கிளியம்பட்டி, மற்றும் பந்துவார்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் நித்தியகல்யாணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் நிச்சயமான வருமானத்தை தரக்கூடிய நித்திய கல்யாணி ஆண்டுதோறும் இப்பகுதியில் மக்காச்சோளத்திற்கு அடுத்தபடியாக நித்தியகல்யாணி அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது. மானாவாரி பயிராகவும், கிணற்று பாசனத்திலும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
சென்றாண்டு நித்திய கல்யாணி குவிண்டாலுக்கு ரூபாய் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை விற்பனையானது . நல்ல லாபத்தை தந்ததால் இந்த ஆண்டும் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்பதால் சென்ற ஆண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகளவு நித்திய கல்யாணி சாகுபடி செய்யப்பட்டது. மூன்று மாத பயிரான நித்திய கல்யாணி தற்போது அறுவடை தொடங்கும் நிலையில் உள்ளது.இந் நிலையில் வியாபாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இடைத்தரகர்கள் நித்திய கல்யாணி சந்தையில் வரவேற்பு இல்லாததால் குவிண்டலுக்கு ரூபாய் மூன்றாயிரம் மட்டுமே தர முடியும் என கூறியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோதை நாச்சியார்புரம் விவசாயி சண்முககனி கூறியது,
விவசாயத்தில் சூரியகாந்தி, மக்காச்சோளம், அல்லது தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், போன்ற காய்கறி பயிர்கள் பயிரிட்டால் சில சமயங்களில் நஷ்டத்தை தரும். ஆனால் எப்போதும் நித்திய கல்யாணி பயிரிட்டு நஷ்டம் ஏற்பட்டு கிடையாது. என்பதால் தொடர்ந்து இப்பகுதியில் நித்யா கல்யாணி பயிரிட்டு வருகிறோம். ஏக்கருக்கு உழவு ,மருந்து அளித்தல், களை எடுத்தல், உள்ளிட்ட பணிகளுக்கு ரூபாய் 17,000 வரை செலவிட்டுள்ளோம். கிணற்று பாசனத்தில் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. எப்போதும் பயிரிடப்பட்ட இரண்டாவது மாதத்தில் இருந்து வியாபாரிகள் வர தொடங்குவார்கள்.
ஆனால் இந்தாண்டு தான் பயிரிடப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் அறுவடை தொடங்கும் நிலையில் கூட வியாபாரிகள் வரவில்லை காரணம் கேட்டபோது அமெரிக்காவில் இறக்குமதிக்கு அதிகளவு வரி விதித்ததால் விலை கட்டுப்படியாகவில்லை. ஆகையால் விலையை குறைக்க வேண்டும் என கூறியதால் அதிர்ச்சி அடைந்து அறுவடை பணியை தொடங்காமல் உள்ளோம் என கூறினார்.