சோழவந்தான் அருகே மின்கட்டணம் செலுத்தியவரின் வீட்டிலேயே மின் இணைப்பை மின்சார வாரிய பணியாளர்கள் துண்டித்து சென்றுள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பழனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை முறையாக மின் கட்டணத்தை செலுத்தி வருவதாக கூறுகிறார். இந்த நிலையில் இவரது மகனான நடேஷ் குமார் என்பவரின் மொபைல் போனுக்கு 22. 9. 24ந் தேதிக்குள் தங்களின் வீட்டுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின்சார வாரியத்தில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. உடனே கடைசி தேதிக்கு முன்பாக மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற நிலையில் கடந்த 20. 9. 24 அன்று ஆன்லைன் மூலம் தங்களின் வீட்டிற்கு மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டிற்கு வந்த சமயநல்லூர் மின்வாரிய பணியாளர்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என இவரது வீட்டின் மின் இணைப்பை துண்டித்து சென்றுள்ளனர். இது குறித்து அறிந்த நடேஷ்குமார் முறையாக மின்கட்டணம் செலுத்தியதற்கு வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து நடேஷ்குமார் கூறுகையில்.., நெடுங்குளம் கிராமத்தில் வசிக்கும் எனது தந்தை பழனியாண்டி என்பவரது பெயரில் மின் இணைப்பு உள்ளது. மின் இணைப்பு எண் 845 மின் கட்டணம் ரூபாய் 334 செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்த நிலையில் இருபதாம் தேதியே ஆன்லைன் மூலம் ரூபாய் 334 மின் கட்டணத்தை செலுத்தி விட்டேன். ஆனால் 24 ஆம் தேதி எங்களது வீட்டிற்கு வந்த சமயநல்லூர் மின்வாரிய பணியாளர்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி மின் இணைப்பை துண்டித்து விட்டு சென்றனர். இது குறித்து அதிகாரியிடம் கேட்ட போது, அதே தெருவில் பழனியாண்டி என்று மற்றொருவர் இருப்பதாகவும், அவருக்கு பதில் உங்களின் வீட்டில் உள்ள மின் இணைப்பை துண்டித்து விட்டதாகவும் கூறி சமாளித்தனர். மின்கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு செல்லும் போது மின் இணைப்பு எண், பெயர் ஆகியவை சரியாக உள்ளதா என சரிபார்த்து மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
