• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தானியங்கி மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திறப்பு

ByJeisriRam

Jul 3, 2024

தேனி மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் நெகிழிப்பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தானியங்கி மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா திறந்து வைத்தார்கள்.

சர்வதேச நெகிழிப் பை இல்லா தினம் (Intemational Plastic Bag Free Diy) ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 7 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன் நோக்கம், தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களின் பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை எடுத்துக்கூறி, நிலையான மாற்று வழிகளைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவித்தலாகும்.

இயற்கையின் அம்சங்களான, சுற்றுச்சூழல் காரணிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் அரசும் பல்வேறு வகையான சட்டங்களை இயற்றி செயல்படுத்தி வருகின்றன.  பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், அவற்றைக் கடைபிடித்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், மக்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறிப்படும் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் நாம் தவிர்த்திட வேண்டும். அதற்கு பதிலாக மக்கும் தன்மையுடைய சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களான துணிப்பைகள், சணல் பைகள், பாக்கு மட்டையிலான பொருட்கள், போன்றவைகளை மீண்டும் பயன்படுத்துகின்ற வகையில், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் தேனி பழைய பேருந்து நிலையத்தில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரங்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஏற்கனவே 21 தானியங்கி மஞ்சப்பை இயந்திரங்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்டுள்ளது. இன்றையதினம் மேலும் இரண்டு தானியங்கி மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருமுறைப் பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்தும். துணிப்பைகளைப் பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, Mission LIFE உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் 1000 மஞ்சப்பைகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.