விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கேரள காவல்துறையினரால் மிகவும் உன்னிப்பாக விசாரிக்கப்பட்ட வழக்குகளில் ஒன்றான வடகரா ஹிட் அண்ட் ரன் வழக்கின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 17 அன்று, பேபியும் அவரது பேத்தி த்ரிஷ்னாவும் வடகரா அருகே உள்ள சரோட் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய கார் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றது. பேபி உயிரிழந்த நிலையில் த்ரிஷ்னா கோமா நிலையில் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து காவல்துறையினரின் விசாரணையில் ஒரு வெள்ளை நிற கார் சம்பந்தப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கு வந்தபோது பொதுமக்களின் கவனத்தைப் பெற்றது. ஆகஸ்ட் மாதம், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (குற்றப் பிரிவு) வி.வி. பென்னி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
விசாரணையின் ஒரு பகுதியாக, வடகரா-தலசேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 40 சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, விபத்து வெள்ளை டைப்-2 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மூலம் ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த மார்ச் மாதம் புரமேரி பகுதியில் பழுதுபார்க்கப்பட்ட கார்களில் ஒன்று, விபத்தின் விளக்கத்துடன் பொருந்தக்கூடிய சேதங்களைக் கொண்டிருந்தது. அந்தக் காரின் சொந்தக்காரரான ஷஜீல் என்ற நபர் தனது கார் சுவரில் மோதியதாக கூறி, காப்பீட்டுக்கு விண்ணப்பித்திறந்ததாக தெரிகிறது.
புரமேரியைச் சேர்ந்தவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவருமான ஷஜீல், விபத்து நடந்த நேரத்தில் இந்தியாவில் இருந்தார் என்பதை போலீசார் கண்டறிந்தனர். முதலில் அவர் விபத்தை மறுத்தார், பின்னர் அனைத்து ஆதாரங்களுடனும் confront செய்தபோது, உண்மையை ஒப்புக்கொண்டார்.

ஷஜீல் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்யும் போது விபத்து நடந்ததாகவும், சம்பவம் நடந்தபோது இருக்கை ஏற்பாடுகள் குறித்து, தனது குழந்தைகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அவர் கவனம் சிதறியதாகவும் கூறியதாக தெரிகிறது. காரின் பின்புற கண்ணாடியிலிருந்து ஸ்டிக்கர்களை அகற்றுவது மற்றும் காப்பீட்டு கோரிக்கைக்கு தவறான காரணங்களை வழங்குவது உள்ளிட்ட ஆதாரங்களை அழிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
விசாரணைக்காக அழைக்கப்பட்ட போதிலும், ஷஜீல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பவில்லை. எனவே, அவருக்கு எதிராக ஒரு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும் அவரது வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் நேற்று கோவை விமான நிலையம் வந்த ஷஜீலை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிக்காமல் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.