கோவையில் ரூபாய் 208.50 கோடியில் பிரம்மாண்டமாக உருவான செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டு வருகிறார்.

கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போது முதலமைச்சராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கோவை காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை, 2021 ஆம் ஆண்டு தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் செம்மொழி பூங்கா திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது.

முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 208.50 கோடியில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இந்த பணிகளை கடந்த 2023 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். தற்பொழுது அந்த பணிகள் நிறைவு அடைந்து உள்ளன. இதைத் தொடர்ந்து கோவை மக்களின் பொழுதுபோக்கு தளமாக விளங்க உள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தற்பொழுது திறந்து வைத்து பார்வையிட்டு வருகிறார்.
கோவை விமான நிலையத்துக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கே.எம்.நேரு, டி.ஆர்.பி ராஜா, சாமிநாதன், கோவை எம்.பி கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர்.

வரவேற்பு முடிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு இருந்து கார் மூலம் காந்திபுரம் வந்து அடைந்தார். தற்பொழுது செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டு வருகிறார்.








