• Sun. May 5th, 2024

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு..,என்.ஐ.ஏ.விடம் ஆவணங்கள் ஒப்படைப்பு..!

Byவிஷா

Dec 2, 2023
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல்குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த அக்.25-ம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செயலில் ஈடுபட்டதாக பிரபல ரவுடியான சென்னை நந்தனம், எஸ்.எம்.நகரைச் சேர்ந்த கருக்கா வினோத் (42) என்பவரை கிண்டி போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
அவர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர் ஏற்கெனவே, சென்னை பாஜக. தலைமை அலுவலகத்திலும் பெட்ரோல் குண்டு வீசி இருந்தார். மேலும், அவர் மீது 14 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல்குண்டு வீசப்பட்ட வழக்கின் முக்கியத்துவம் கருதி என்ஐஏ (தேசியபுலனாய்வு முகமை) இந்த வழக்கைவிசாரிக்க முடிவு செய்தது.
முன்னதாக ஆளுநர் மாளிகை தரப்பில், ‘பெட்ரோல் குண்டு வீசியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும்’ என சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், கருக்கா வினோத் மீது இந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யாமல் முதலில் புகார் அளித்த கிண்டி போலீஸாரின் புகார் மனுவை ஏற்று அதன்படி, வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில்தான் இந்த வழக்கை என்ஐஏ கையிலெடுத்தது. இதன் தொடர்ச்சியாக, ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கின் விசாரணை விவரம், சேகரிக்கப்பட்ட வீடியோமற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டஅத்தனை ஆவணங்களையும் என்ஐஏ-விடம் ஒப்படைக்கசென்னை காவல் ஆணையர்சந்தீப் ராய் ரத்தோர், கிண்டி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.அதன்படி ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *